பூமணியின் ‘வெக்கை’ நாவலைக்கொண்டு வெற்றிமாறன் இயக்கிவரும் ‘அசுரன்’ படத்தில் எம்.எல்.ஏ.வும் பிரபல காமெடி நடிகருமான கருணாஸின் மகன் கென் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். இத்தகவலை படக்குழு சற்றுமுன்னர் உறுதி செய்தது.

வட சென்னையை தொடர்ந்து ’அசுரன்’ படப்பிடிப்பை தொடங்கி உள்ளது தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி. இந்த படத்தில் தனுஷின் சகோதரியாக ஒரு முக்கிய வேடத்தில்  மலையாள திரையுலகின் பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார்.  மஞ்சு வாரியருக்கு இது முதல் நேரடி தமிழ்ப்படம்.

இந்நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில்  கருணாசின் மகன் கென் கருணாசை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இவர் ஏற்கனவே ’அழகு குட்டி செல்லம்’, ’நெடுஞ்சாலை’ படங்களில் நடித்தவர். டிரம்ஸ் கலைஞரும் கூட. 

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கிறது. ஜீவி.பிரகஷ்குமார் இசையமைக்கும் இப்படத்துக்கு வெற்றிமாறனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். நாவலில் இடம்பெற்றுள்ள ஒரிஜினல் பிரதேசங்களான சாத்தூர், கோவில்பட்டி நகரங்களை ஒட்டிய காட்டுப்பகுதிகளில் நடைபெற்றுவருகிறது.