’எனக்கு மட்டும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிப் பார்க்கட்டும். அப்ப இந்த கருணாஸ் யாருன்னு காட்டுவேன்’என்று பகிரங்க சவால் விட்டிருக்கிறார் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ்.

காலையில் எடப்படியுடன் காபி. மதியத்தில் டி.டி.வி.யுடன் லஞ்ச். மாலையில் மு.க. ஸ்டாலினுடன் ஸ்நாக்ஸ் என்று தன்னையும் குழப்பி மற்றவர்களையும் குழப்பி ஒரு தினுஷான அரசியல் செய்து வருகிறார் கருணாஸ். ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்களும் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி கொறடா அளித்த பரிந்துரையின் பேரில் மூவரிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் கருணாஸுக்கும் , தமிமுன் அன்சாரிக்கும் அனுப்பப்படவில்லை.

இதுதொடர்பாக புதுக்கோட்டையில் நேற்று  செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், “தொடர்ந்து தகுதி நீக்க நடவடிக்கைகள் நடந்துவருகிறது. இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் முழுக்க முழுக்க அரசியல்தான். ஆனால், தேர்தல் முடிவுகள் வரும் முன்பே இதுபோன்ற ஒரு பரிந்துரையை கொறடா அளித்திருக்கிறார் எனும்போது, அவர்களுக்கு ஏதோ பயம் இருப்பதாகவே தோன்றுகிறது. கொறடா சொல்கிறார், மூவரும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டிருக்கிறார்கள் என்று. ஆனால், தாங்கள் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பதாக மூவரும் தெரிவித்திருக்கிறார்கள். எனவே கொறடாவின் புகாரே நேர்மாறாக உள்ளது.

இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்பட்சத்தில் என்னுடைய வாக்கு யாருக்கு என்பதை அந்த நேரத்தில் முடிவு செய்வேன். அது உங்களுக்கே வெளிப்படையாகத் தெரிந்துவிடும். எனக்கு ஏன் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பவில்லை என்று தெரியவில்லை. அதை அவரிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு நோட்டீஸ் அனுப்பினால் அடுத்து என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. ஆனால் கண்டிப்பாக எனது ரியாக்‌ஷன் அவர்கள் எதிர்பார்ப்பதை விட படு பயங்கரமாக இருக்கும்’ என்று கன்ஃபியூஸ் பண்ணுகிறார் கருணாஸ்.