முகநூல் உள்ளிட்ட வலைதளங்களில் வைரலாகப் பரவிய வைரமுத்துவின் பாடல் திருட்டு சமாச்சாரத்தை அப்பாடலைப் பறிகொடுத்த பாடலாசிரியர் கார்த்திக் நேதாவே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். தனது பல பாடல்கள் இவ்வாறு திருடப்பட்டுள்ளன என்றும் கூறுகிறார்.

‘96 படத்தின் மூலம் பிரபல பாடலாசிரியாகியிருக்கும் கார்த்திக் நேத்ரா அதற்கு முன்பும் சில படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். சின்மயி விவகாரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி, சற்றே ஓய்வெடுத்துக்கொண்டிருந்த வைரத்தை சிலர் பொங்கல் சிறப்புப்பரிசாக மீண்டும் வம்பிழுக்க ஆரம்பித்தனர். அதில் கார்த்திக் நேத்ரா எழுதிய ‘சரசர சாரைக்காத்து’ பாடலை வைரம் சுட்டார் என்று செய்திகள் காட்டுத்தீயாய்ப் பரவின.

இதையொட்டி, பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த கார்த்திக் நேதா அப்பேட்டியில் வைரமுத்துவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் தமிழகத்தின் பெரும் கவிஞர் அவர். அக்கவிஞர் மீது எனக்குப் பெரும் காதலே இருந்தது. ‘வாகை சூடவா’ பாடலுக்கு முதலில் என்னை டிராக் எழுதச்சொல்லிதான் இயக்குநர் அழைத்தார். ஆடியோ ரிலீஸுக்குப் பின்னர்தான் என் பாடலை ஒன்றிரண்டு வரிகள் மாற்றி வைரமுத்து தன் பெயரைப் போட்டுக்கொண்டார் என்பது எனக்குத்தெரியும். 

இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு அது முதல் படம் என்பதால் வைரமுத்துவை மீறி அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆனால் வைரமுத்துவின் செயலுக்கு தானும் மறைமுகமாக துணைபோகிறோமே என்ற குற்ற உணர்ச்சி அவருக்கு இருந்தது. அதனால் அந்தப்படத்திலேயே ஒரு பாடலுக்கு வாய்ப்பளித்த அவர், அடுத்து தான் இசையமைக்கும் எல்லாப் படங்களுக்குமே பாடல் எழுத அழைத்திருக்கிறார்’ என்கிறார் கார்த்திக்.

நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியில் நீங்கள் குறிப்பிட்ட கவிஞர் வைரமுத்துதானே என்ற கேள்விக்கு ஆமாம் சொல்லும் கார்த்திக் ‘அந்த ஆளு பெயரை நான் சொன்னதா போட்டுராதீங்க. அப்புறம் அந்த ஆளு என்னை அழிச்சுருவாரு’ என்றும் பயந்தபடியே சொல்கிறார்.