இறுதிச்சுற்று படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சுதா கோங்கரா இயக்கும் படம் 'சூரரைப் போற்று'. ஹீரோவாக சூர்யா நடிக்கும் இந்தப்படத்தில், அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நவம்பர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'சூரரைப் போற்று' படத்தை, முதலில் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. 

ஆனால், தற்போது படத்தை கோடை விடுமுறைக்கு தள்ளிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு காரணம், கார்த்தி - ஜோதிகா - சத்யராஜ் இணைந்து நடிக்கும் 'கார்த்தி-20' படத்தை, கிருஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம். 

'பாபநாசம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்திற்கு, இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. 

மேலும், சூர்யா மற்றும் கார்த்தியின் இவ்விரு படங்களின் தமிழக விநியோக உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி வாங்கியுள்ளதும் 'சூரரைப் போற்று' தள்ளிப்போவதற்கு மற்றொரு காரணம் ஆகும்.


ஏற்கெனவே, டிசம்பர் மாத கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தை குறிவைத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ஹீரோ', அருண்விஜய்யின் 'மாஃபியா' ஆகிய படங்கள் ரெடியாகி வருகின்றன. சூர்யாவின் 'சூரரைப் போற்று' படம் வரவில்லை என்றாலும், கார்த்தியின் படம், அந்தப்படங்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.