பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட மகாநடி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது. இதையடுத்து தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோரின் வாழ்க்கை  வரலாறு தொடர்பான திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. 

விளையாட்டு துறையைப் பொறுத்த வரை தோனி, மேரி கோம் உள்ளிட்டோரின் திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. இதையடுத்து முன்னாள் பளு தூக்கும் வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானயுமான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குவதாக பிரபல இயக்குநர் சஞ்சனா ரெட்டி அறிவித்திருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கர்ணம் மல்லேஸ்வரியின் பிறந்தநாளான்று வெளியானது.  

2018-ம் ஆண்டு ராஜூ காடு என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குநரான சஞ்சனா ரெட்டி, அதன் பின்னர் கர்ணம் மல்லேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கினார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சஞ்சனா ரெட்டி, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது நிலைமை மோசமடைந்து வருவதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம்  பொருத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அந்த செய்திகள் அனைத்தும் வெறும் வதந்தி என பிரபல தயாரிப்பாளரும் எழுத்தாளருமான கோனா வெங்கட் தெரிவித்துள்ளார். 3 நாட்களாக தண்ணீர் ஆகாரம் மட்டுமே சாப்பிட்டதால் சஞ்சனா ரெட்டி, வீட்டில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது உண்மை தான். ஆனால் அவர் ஆபத்தான நிலையில் இல்லை. விரைவில் குணமடைவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.