இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முடிசூடா மன்னன் கபில் தேவிடமிருந்து தனது ‘எல்.கே.ஜி’ படத்துக்கு வாழ்த்துச் செய்தி வந்துள்ளதால் உற்சாகத்தின் மிகுதியில் திக்குமுக்காடிப் போயுள்ளார் ஆர்.ஜே.வும், நடிகருமான பாலாஜி.

ஆர் ஜே வாக தனது பயணத்தை துவங்கி பின்னர் சினிமாவில் காமமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி. பிரபல இயக்குநர்களின் பல படங்களில் காமெடி நடிகராக பல படங்களில் முத்திரை பதித்த  பாலாஜி, தற்போது ‘எல்.கே.ஜி.’ என்ற படத்தின் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜியே  எழுதியுள்ளார். ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘அரசியலுக்கு வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி’ என்று தான் படத்தின் விளம்பரம் தொடங்கப்பட்டது. மேலும், படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர் என அனைத்துமே சமீபத்திய அரசியல் நிகழ்வுகளைக் கிண்டல் செய்யும் சமீபத்திய இருந்ததால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரபல இந்திய அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ‘நண்பர் ஆர்.ஜே. பாலாஜி மிகச்சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். ‘எல்.கே.ஜி’ படம் மாபெரும் வெற்றி பெற பாலாஜிக்கும் படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.கிரிக்கெட் விளையாடுவது சுலபம். ஆனால் சினிமா எடுப்பது மிக மிக கஷ்டம். எப்பிடி இருக்கே பாலாஜி நல்லா இருக்கியா’ என்று நடுவில் தமிழிலும் பேசி நீ பெரிய ஹீரோவா வரணும்’ என கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார். 

இத்தகவலை பெருமிதம் பொங்க தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாலாஜி ‘ஜாம்பவானும் மிகச்சிறந்த மனிதநேயருமான கபில்தேவிடமிருந்து வாழ்த்து’என்று குறிப்பிட்டிருக்கிறார். கபில் தேவ்வும் ஆர் ஜே பாலாஜியும் கிரிக்கெட் வர்ணனை செய்யும் போது நெருங்கிய நண்பர்களானவர்கள்.