’இன்னும் 3 மாதங்களில் தொடங்கவிருக்கும் ‘தலைவி’படத்துக்காக தனது எடையை வெகுவாகக் குறைத்துவரும் நடிகை கங்கனா ரனாவத், சில தினங்களாக பரத நாட்டிய வகுப்புகளுக்கும் செல்ல ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் நடிக்க கங்கனா ரனவத் தயாராகி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பற்றிய தகவல்கள்  தற்போது வெளியாகியுள்ளன.

இந்த வருடம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வாட்ச்மேன், தேவி 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. அந்த இரு படங்களுமே படுதோல்வி அடைந்துள்ள நிலையில் விஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.எல். விஜய் முன்னரே அறிவித்தபடி ’தலைவி’ என்ற பெயரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் பயோபிக்கை இயக்கவுள்ளார்.இப்படத்திற்கு பாலிவுட் நடிகையான கங்கனா ரனவத் ஜெயலலிதா பாத்திரத்தை ஏற்கவுள்ளார்.

கங்கனா ரனவத் நடிப்பில் சமீபத்தில் வெளியான மணிகர்னிகா என்ற இந்திப் படத்தை தொடர்ந்து இம்மாதம் வெளியாக இருக்கும் ’மெண்டல் ஹை க்யா’ படத்தின் புரமோஷன் பணிகளை சில நாட்களுக்கு முன் நிறைவு செய்துள்ளார். இந்த நிலையில், கங்கனா தனது தலைவி படத்திற்காக தனது பயிற்சிகளை தொடங்கியுள்ளார்.தமிழ் மொழி உச்சரிப்புக்காக பயற்சி பெற்று வரும் அவர், மேலும் பரத நாட்டியம் பயிற்சியிலும் ஈடுபடவுள்ளார். ஜெயலலிதா முறையாக பரதத்தை பயின்றவர் என்பதால் இப்படத்தில் பரத நாட்டியம் முக்கியமான பங்குவகிக்கவுள்ளது. ஜெயலலிதா தன் சிறு வயதை பெரும் பாலும் மைசூரில் கழித்ததால், தலைவி படப்பிடிப்பு மைசூரில் அவரது சிறுபிராயத்தின் காட்சிகளில் இருந்து தொடங்குகிறது.

வரும் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்குக் முதல் ஷெட்யூலில் ஜெயலலிதாவின் இளைமைக்கால நிகழ்ச்சிகள் துவங்கி அவர் சினிமாவில் அறிமுகமாவது வரை படப்பிடிப்பு நடத்தப்படவிருக்கிறதாம்