அங்க அடிச்சா இங்க வலிக்கும்டா என்பதுபோல், இந்தியில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் கடந்த வெள்ளியன்று ரிலீஸான ‘காமோஷி’ படம் படுதோல்வி அடைந்துள்ளதால் நடிகை நயன்தாரா உள்ளிட்ட ‘கொலையுதிர்காலம்’படக்குழுவினர் பெரும் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.

ஏற்கனவே பல சர்ச்சைகளைச் சந்தித்து, கடந்த 14ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நயன்தாராவின் ‘கொலையுதிர்காலம்’ படத்துக்கு கடைசிநேரத்தில் பாலாஜி குமார் என்பவர், அதே  தலைப்பில் இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது கொலையுதிர் காலம் திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்த நீதிபதி, இவ்விவகாரத்தில் ஜூன் 21ஆம் தேதிக்குள் விளக்கமளிக்கும்படி தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் சோதனை மேல் சோதனையாக கடந்த வெள்ளியன்று மும்பையில் ரிலீஸான ‘காமோஷி’ படம் பெரும் தோல்வி அடைந்துள்ளதால் தயாரிப்பாளர், நயன் உள்ளிட்ட படக்குழுவினர் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் காமோஷியை இயக்கிய அதே சக்ரி டோலட்டி, அதே கதையை தமிழில் இயக்கிய படம்தான் ‘கொலையுதிர்காலம்’. தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்த கொலையுதிர்காலத்துக்கு இது மிகவும் பின்னடைவான செய்தி  என்பதால் விநியோகஸ்தர்கள் இனி இப்படத்தை அடிமாட்டு விலைக்குத்தான் கேட்பார்கள்.

இதே இயக்குநர் சக்ரி டோலட்டித்தான் அஜீத்துக்கு சூப்பர் டூப்பர் ஃப்ளாப்பாக அமைந்த ‘பில்லா 2’படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.