Kamalhaasan : இளையராஜாவுடன் சென்று ராக்கி பாய்யை பார்த்த கமல்ஹாசன் - வைரலாகும் புகைப்படங்கள்
Kamalhaasan : சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடிகர் கமல்ஹாசனுக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கே.ஜி.எஃப் 2 படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டன்று உலகமெங்கும் 10 ஆயிரம் திரைகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. பிரசாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். மேலும் சஞ்சய் தத், ரவீனா டண்டன், சரண், ஈஸ்வரி ராவ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியிடப்பட்டதால், இதற்கு பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்து வருகிறது. சுமார் 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 900 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இன்னும் சில நாட்களில் இப்படம் 1000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடிகர் கமல்ஹாசனுக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கே.ஜி.எஃப் 2 படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இருவருக்கு படம் மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி திரைக்கு வர உள்ளது. தற்போது அப்படத்துக்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... Abhirami : ஸ்மோக்கிங் ரூமில் பாலாவுடன் நெருக்கமாக இருந்ததாக எழுந்த சர்ச்சை - உண்மையை ஓப்பனாக சொன்ன அபிராமி