'வாக்காளர்களிலேயே அதிக சக்தி வாய்ந்தவர்கள் மாணவர்களாகிய நீங்கள்தான். எனவே நீங்கள் மனது வைத்தால் என்னை தமிழகத்தின் முதல்வராகக் கொண்டுவரமுடியும்’ என்று அரசியல் பஞ்ச் அடித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

தனது அரசியல் யுக்தியின் முக்கிய அம்சமாக கல்லூரி மாணவ, மாணவிகளை தொடர்ந்து சந்தித்துவரும் கமல், வாக்காளர் தினமான நேற்று  சென்னையில் தனியார் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுடன்  உரையாடினார் . வாக்காளர் தினம் குறித்து அவர் மாணவர்களுடன் பேசுகையில், ”வாக்களிப்பது என்பது உங்கள் முதலீடு. எனவே மிகக் கவனமாக வாக்களியுங்கள். வாக்குச்சாவடிக்குச் சென்ற பின்னர் சின்னங்களை பார்த்து வாக்களிக்காதீர்கள். எது உங்களுக்கான அரசியல் கட்சி, மக்கள் நலனிற்காகப் பாடுபடும் கட்சி என்பதைத் தேர்ந்தெடுங்கள். மக்கள் நீதி மய்யம் அதில் ஒரு கட்சியாக இருக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

அடுத்து கேள்வி நேரத்தில், மாணவி ஒருவர் கமலிடம் நாங்கள் உங்களை முதல்வராகப் பார்க்க விரும்புகிறோம் என்றார். அதற்குப் பதிலளித்த கமல், “நான் எதுவாக வேண்டுமென்று நீங்கள் எண்ணுகிறீர்களோ, அதுவாக நான் தயார். நான் உங்கள் முதல்வராக வேண்டுமென்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.ஏனெனில் வாக்காளர்களிலேயே அதிக சக்தி வாய்ந்தது மாணவர்களின் வாக்கு’ என்றார்.

அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளித்த கமல், “ எங்கு சென்றாலும் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வியூகங்கள் என்ன என்று கேட்கிறார்கள். நமது வியூகங்களை அடுத்தவருக்குச் சொல்லக்கூடாது. அவ்வாறு சொல்லிவிட்டால் அது வியூகமே அல்ல. எனவே வியூகங்களில் ரகசியம் காக்கப்படவேண்டும். நாங்கள் வென்ற பிறகு உங்களுக்குச் சொல்கிறேன்.எங்கள் எதிர்காலத்திட்டங்கள் குறித்து கேள்வி கேட்டாலும் அதே பதில்தான். அத்திட்டங்களின் அட்டவணை மிகப்பெரியது ஆனால் எனக்கு உங்கள் முன் பேசுவதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் மிகக்குறைவு” என்று கூறினார்.