சென்னை அருகே எண்ணூர் கழிமுக பகுதிகளை பாதுகாக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு கமல் அங்கு சென்றது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கூறி வந்த நிலையில், விஸ்வருபம் 2 படத்தின் சூட்டிங்கிற்கு சென்ற கமல் அதனை விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது.   

சமூக ஆர்வலாகவும் சுற்றுச் சூழல் ஆர்வலாகவும் இருப்பவர் நித்தியானந்தம். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக மட்டும் அல்ல ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் இவர் போராடி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கமல் இவரோடு இணைந்து எண்ணூர் துறைமுகம் அருகே உள்ள கழிமுகத்திற்கு சென்றார். மேலும் அந்த கழிமுக பகுதிகளில் அனல் மின் நிலைய கழிவுகளை கொட்டினால் வட சென்னைக்கு ஆபத்து இருப்பதாக கமல் அறிக்கை வெளியிட்டார்.   

அதிகாலையில் எண்ணூர் கழிமுகப்பகுதிக்கு சென்ற கமல் அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை ஊடகங்களுக்கு வழங்கி செய்திக்குறிப்பும் வெளியிட்டார். கமல் இயற்கைக்கு ஆதரவாக விழிப்புணர்வு செய்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் துவக்க காட்சிகளில் கமல் எண்ணூர் கழிமுகப்பகுதியில் நிற்பது போன்ற காட்சிகள் உள்ளன.

அதாவது எண்ணூர் கழிமுகப்பகுதிக்கு சூட்டிங் சென்ற கமல் அதனை சமூக சேவை இயற்கை ஆர்வம் என்கிற ரீதியில் புரமோட் செய்து கொண்டதாக தற்போது புகார் எழுந்துள்ளது. மேலும் அன்றையதினத்திற்கு பிறகு கமல் எண்ணூர் கழிமுகப்பகுதிகள் பற்றியும் வாய் திறக்கவில்லை. இதனால் விளம்பரத்திற்காக கமல் தங்களை பயன்படுத்திக் கொண்டதாக இயற்கை ஆர்வலர்களும் கொந்தளிப்பில் உள்ளனர்.