22 ஆண்டுகளுக்கு இந்திய சினிமாவே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு பிரம்மாண்டமாகத் துவக்கப்பட்ட ‘மருதநாயகம்’படத்தை மீண்டும் துவக்குவது சம்பந்தமாக விரைவில் அறிவிக்கவிருக்கிறாராம் கமல். கைவசம் அரசியல் பணிகள் அதிகம் இருப்பதால் தன்னுடையை பாத்திரத்தை வேறொருவர் நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார் கமல்.

பிரிடிஷ் இளவரசி இரண்டாம் குவின் எலிஸபெத் குத்து விளக்கேற்றி வைக்க 1997ம் ஆண்டு கமல் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் துவக்கப்பட்ட படம் மருதநாயகம். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்க, சத்யராஜ்,நாசர், நாகேஷ், இந்தி நடிகர் ஓம் பூரி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். கமலின் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைத் தயாரிப்பில் ஈடுபடவிருந்த ஒரு பிரபல பிரிடிஷ் நிறுவனம் திடீரென பின்வாங்கியதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சில நாட்களே படப்பிடிப்பு முடிந்திருந்த மருதநாயகம் கைவிடப்பட்டது.

தற்போது அந்த பிரம்மாண்ட படத்தை மீண்டும் கையிலெடுக்க முடிவெடுத்துள்ளார் கமல். படப்பிடிப்பு நடந்த பகுதிகளையும் அப்படத்தில் பயன்படுத்த முடிவு செய்திருக்கும் கமல் ஏற்கனவே எடுத்த பகுதிகளை முதல் 30 நிமிடக் காட்சிகளாக அமைத்துவிட்டு அடுத்து ...12 ஆண்டுகளுக்குப் பின்...என்று கதையை நகர்த்த முடிவு செய்துள்ளாராம்.

கைவசம் அரசியல் பணிகள் அதிகமுள்ளதால் “மருதநாயகம் படம் தயாராகும். எனக்கு அரசியல் பணிகள் இருப்பதால் மருதநாயகம் படத்தில் நான் இருக்க மாட்டேன். எனக்கு பதில் வேறு நடிகர் இருப்பார்” என்கிறார். கமலின் மருதநாயக வாரிசாக களம் இறங்கும் அதிர்ஷ்டம் யாருக்குக் காத்திருக்கிறதோ? இப்போதைய நிலவரப்படி விக்ரம் அல்லது தனுஷுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது.