மத்திய, மாநில அரசுகளின் கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா கருத்துக்கு ‘அன்புத்தம்பி சூர்யாவை ஆதரிக்கிறேன்’என்று கமல் அள்ளி அணைக்க, ஆன்மிக அரசியல்வாதி ரஜினியோ வழக்கம்போல் கள்ள மவுனம் காக்கிறார். இதனால் ரஜினியை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, மூன்று வயதிலிருந்தே இந்தி திணிக்கப்படுகிறது. எல்லோரும் அமைதியாக இருந்தால் இந்தி நம் மீது திணிக்கப்படும். புதிய கல்வி கொள்கை விஷயத்தில் நம் எண்ணத்தை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்ல வேண்டும்' என்றார். சூர்யாவின் இந்த பேச்சுக்கு பாஜகவைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க.அமைச்சர்கள் சிலரும்  கண்டனம் தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் சூர்யாவின் பேச்சு குறித்து  நடிகரும்  மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ/மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காகத் தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்காக உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதியகல்விக் குறித்த தம்பி சூர்யாவில் கருத்துக்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கின்றது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு'  என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக புதிய கல்வி கொள்கை குறித்து பெரிய நடிகர்கள் எல்லாரும் பயந்து கொண்டு இருக்கும்போது சூர்யா தைரியமாகப் பேசியுள்ளது பாராட்டுக்குரியது   என்று சீமான் தெரிவித்திருந்த நிலையில், சக நடிகர் ஒருவரின் நல்ல கருத்துக்கு ரஜினி ஆதரவு தராமல் மவுனம் காப்பது பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.