சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் த இந்து நாளிதழின் ராம் தலைமையில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் வழக்கம் போல் கமலிடம், ரஜினி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ரஜினியின் அரசியல் பிரவேசம், ரஜினியின் அரசியல் செயல்பாடுகள் தொடர்பான கேள்விகள் கமலிடம் முன் வைக்கப்பட்டன. வழக்கம் போல் இந்த கேள்விகளுக்கு எல்லாம் கமல் அளித்த பதில் லாஜிக்காக இருந்தாலும் ரசிக்கும்படி இல்லை. ரஜினி தமிழர் இல்லை என்று கூறி வருபவர்களின் கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வகையிலேயே கமல் பேசியுள்ளார்.

அதாவது எங்கேயோ பிறந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது பெருமை மிகு தமிழராகியுள்ளார். அவர் தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். ரஜினி தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும். இது தான் கமல் பேசியதன் முக்கிய அம்சங்கள். அதாவது ரஜினி தமிழ்நாட்டில் பிறந்தவர் இல்லை என்பதை இந்த இடத்தில் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார் கமல். என்னதான் ரஜினியை பெருமை மிகு தமிழர் என்று கூறியிருந்தால், அவர் எங்கேயோ பிறந்தவர் என்கிற ரீதியில் கமல் பேசியிருப்பதை ரஜினி ரசிகர்கள் ரசிக்கவில்லை. மேலும் கமலின் இந்த பேச்சுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் தீவிரமாக எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

இதே போல் ரஜினி தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கமல் கூறியுள்ளார். ரஜினி தமிழகத்தில் சம்பாதிக்கும் பணத்தை கர்நாடகாவில் முதலீடு செய்கிறர் என்று நீண்ட நாட்களாகவே விமர்சனங்கள் உண்டு. அதனை மனதில் வைத்து தான் ரஜினி தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று மறைமுகமாக ரஜினியை வம்பு இழுத்துள்ளார் கமல் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். தான் சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்று ரஜினிக்கு தெரியாதா என்றும் அவர்கள் கமலுக்கு கேள்வி எழுப்புகிறார்கள்.

இதற்கிடையே கமல் பேசிய இந்த பேச்சுகள் ரஜினி கவனத்திற்கு உடனடியாக சென்றுள்ளது. கமலின் பேச்சு விவரம் முழுவதையும் கேட்டறிந்த ரஜினி, ஏன் கமல் இப்படி பேசினார் என்று வருத்தப்பட்டதாக சொல்கிறார்கள். தான் எங்கே பிறந்தேன் என்பது தற்போது முக்கியமா? என்றும் ரஜினி வருத்தப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் முதலீடு விஷயத்திலும் தன்னை ஏன் கமல் தேவையில்லாமல் உள்ளே இழுத்துவிட வேண்டும் என்றும் ரஜினி யோசிக்கிறார். அடுத்த செய்தியாளர்களை ரஜினி சந்திக்கும் போது இந்த கேள்விகள் எழுப்பப்படும் பட்சத்தில் அதற்கு ரஜினி அளிக்கும் பதில் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.