இன்றிலிருந்து மூன்றாவது தினத்தில் கமலின் 65 வது பிறந்த நாள் சீரும் சிறப்புமாக அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியினரால் கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் கமலின் பல்வேறு கெட் அப்களை ஜிஃப் இமேஜ்களாக வெளியிட்டு தங்களுக்குப் பிடித்த கெட் அப்பை கமெண்ட்களில் பதிவு செய்யுமாறு வேண்டுகோள் வைத்துள்ளது.

1954ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதியன்று பிறந்த கமல் வரும் வியாழன் அன்று தனது 65 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அத்தோடு அவர் தனது 5 வது வயதிலேயே ‘களத்தூர் கண்ணம்மா’மூலம் கலைத்துறையிலும் அடியெடுத்து வைத்ததால் 60 ஆண்டுகால சாதனைகளுக்கு சொந்தக்காரராகிறார். இந்த இரு நிகழ்வுகளையும் இம்முறை மிக பிரம்மாண்டமாகக் கொண்டாட விரும்பிய அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பல்வேறு விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விழா துவங்க இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் நேற்று முதலே கமலின் பல்வேறு கெட் அப்கள் கொண்ட போஸ்டர்கள் தமிழகமெங்கும் சுவர்களை அலங்கரிக்கத் துவங்கியுள்ளன.

இந்நிலையில் சற்றுமுன்னர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவன ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஜிஃப் இமேஜ் வெளியிடப்பட்டுள்ளது. அதில் களத்தூர் கண்ணம்மா துவங்கி 16 வயதினிலே,சிகப்பு ரோஜாக்கள், ராஜபார்வை, தேவர் மகன், குணா,விருமாண்டி,சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து,நாயகன், அபூர்வ சகோதரர்கள்,ஹே ராம்,இந்தியன் உள்ளிட்ட கமலின் மிக முக்கியமான கெட் அப்கள் ஸ்லைட் ஷோவாக ஓடுகின்றன. அதை ஒட்டி ரசிகர்களுக்கு,...இதில் உங்களுக்குப் பிடித்த கமலின் கெட் அப்பை கமெண்டுகளாக பதிவு செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர். அதில் மிக ஆர்வமாகப் பங்கெடுத்து வரும் ரசிகர்கள் இப்போதைய நிலவரப்படி, விபத்துக்குப் பின் முகம் சிதைந்து காணப்படும் ‘அன்பே சிவம்’பட கெட் அப்பையே மிக அதிகமாக விரும்பி ஷேர் செய்து வருகின்றனர்.