18 சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்றத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட இருப்பவர்களின் பெயர்கள் நாளை மறுநாள் புதன்கிழமை அதிகாரபூர்வமாக அற்விக்கப்பட உள்ள நிலையில் கமல் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடவிருப்பதை அவரது கட்சி வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

கமல் கட்சி சார்பில் போட்டியிட இருப்பவர்கள் பற்றி பல்வேறு யூகங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. கமல்ஹாசன் தென் சென்னையிலோ ராமநாதபுரத்திலோ களம் இறங்கலாம் என்றும் கமீலா நாசர் மத்திய சென்னையிலும் துணைத் தலைவர் மகேந்திரன் பொள்ளாச்சியிலும் களம் இறக்கப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகின.

மத்திய சென்னை பகுதிகளில் கமீலா நாசருக்கு ஓட்டு கேட்டு முன்கூட்டியே  போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. கமல்ஹாசனுக்காக ராமநாதபுரம் பகுதியில் கட்சி சார்பில் குடிநீர் பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தேடித்தேடி  தீர்க்கப்பட்டு வருகின்றன. 

வேட்பாளர் பட்டியல் எப்படி இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் பல்வேறு ஆலோசனைகள் நடத்தி வருகிறார். அவர் எடுத்துள்ள முடிவுகளில் மிகவும் முக்கியமான ஒன்று பா.ஜனதாவுக்கு கடுமையான போட்டி கொடுத்து அவர்களை வீழ்த்தியே ஆகவேண்டும் என்பது. இதற்காக அந்த கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளுக்கும் பிரபலங்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளார். பா.ஜனதா கன்னியாகுமரி, சிவகங்கை, கோயம்புத்தூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. எனவே இந்த 5 தொகுதிகளிலும் கட்சியில் உள்ள பிரபலங்களை களம் இறக்க இருக்கிறோம்.

ராமநாதபுரத்தில் கமல்ஹாசன் போட்டியிடுவது உறுதி. கோயம்புத்தூரில் துணைத்தலைவர் மகேந்திரன் களம் காண்பார். மற்ற தொகுதிகளில் ஸ்ரீபிரியாஅநேகமாக கன்னியாகுமரியில் நிறுத்தப்படலாம். மற்ற பி.ஜே.பி தொகுதிகளில்  கமீலா நாசர், சினேகன், சுகா, கு.ஞானசம்பந்தம், கோவை சரளா இவர்களில் 3 பேர் களம் இறங்குவார்கள்.

கமல் கட்சியில் இணையாத அதே நேரத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற பிரபலங்கள் சிலருடனும் கமல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறார். எனவே நாளை மறுநாள் வெளியாகும் பட்டியலில் சில ஆச்சரியங்கள் இருக்கலாம்.அப்போது கமல் எவ்வளவு பெரிய அரசியல் சாணக்கியன் என்பதை தமிழக அரசியல்வாதிகள் தெரிந்துகொள்வார்கள் என்கிறது மக்கள் நீதி மய்ய வட்டாரம்.