தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய சினிமாக்களில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. 1970, 80களில் ரஜினி, கமல், அமிதாப் பச்சன் ஆகிய உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தாலும் அவர்களை மிஞ்சி நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியவர்.

ரஜினியுடனும் கமலுடனும் இணைந்து அதிகமான படங்களில் ஸ்ரீதேவி நடித்துள்ளார். 1967ல் கந்தன் கருணை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி, நம்நாடு, துணைவன் உள்ளிட்ட பல படங்களில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகிய நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

1976ல் மூன்று முடிச்சு திரைப்படத்தில் ஸ்ரீதேவியை நாயகியாக அறிமுகப்படுத்தினார் கே.பாலசந்தர். இந்த படத்தில் ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து ஸ்ரீதேவி நடித்திருந்தார். அதன்பிறகு பாரதிராஜாவின் முதல் திரைப்படமான 16 வயதினிலே படத்திலும் ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து ஸ்ரீதேவி நடித்திருந்தார். ரஜினி, கமலை மிஞ்சும் அளவுக்கு மயில் கேரக்டரில் கலக்கியிருப்பார் ஸ்ரீதேவி.

1970, 80களில் முக்கியமான இயக்குநர்களான பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் ஆகிய இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடித்து தனக்கென ஒரு முத்திரை பதித்தவர் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவியே நினைத்தால் கூட அதுபோன்ற நடிப்பை மீண்டும் வழங்க முடியாத அளவுக்கு அவர் நடித்திருந்த திரைப்படம் தான் மூன்றாம் பிறை. பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடித்த இந்த படத்தில், மனநலம் குன்றியவராக படம் முழுதும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த படத்திற்கு ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது சிறப்பான நடிப்பால் அந்த விருதை கமல் தட்டி சென்றார். இருவருமே ஒருவருக்கு ஒருவர் நடிப்பில் சளைத்தவர்கள் அல்ல.

நடிப்பிற்கு பெயர்போன கமலையே மிஞ்சும் அளவுக்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்துபவர் ஸ்ரீதேவி. படம் முழுதும் கமலை தூக்கி சாப்பிட்டிருப்பார் ஸ்ரீதேவி.

ஆனால் கிளைமாக்ஸின் ஒற்றை காட்சியில், படம் முழுதும் அசத்திய ஸ்ரீதேவியின் நடிப்பை ஓவர்டேக் செய்து தேசிய விருதை கமல் தட்டி சென்றார்.

ஆனால், விருது பெற்ற கமலோ, என்னைவிட ஸ்ரீதேவிதான் சிறப்பாக நடித்திருந்தார் என ஸ்ரீதேவியின் நடிப்பை புகழ்ந்தார். இயல்பான நடிப்பின் அடையாளமாக திகழும் கமலே, தன்னைவிட ஸ்ரீதேவிதான் சிறப்பாக நடித்திருந்தார் என கூறும் அளவுக்கு மூன்றாம் பிறை படத்தில் நடித்திருப்பார் ஸ்ரீதேவி.