கண்ணியமிக்க மனைவியாக, பாசமுள்ள தாயாக பார்த்த  ஸ்ரீதேவியை இறந்து பார்க்கும் கொடுமை நேர்ந்து விட்டதே என ஸ்ரீதேவியின் மறைவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ், இந்தி என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக  சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். தமிழில் 16 வயதினிலே, மூன்றாம் பிறை போன்ற படங்களில் நடிகர் கமலஹாசனுடன் அவர் நடித்த கதா பாத்திரங்கள் மிகவும் பேசப்பட்டன.

கமலஹாசனுடன் அவர் தமிழ், இந்தி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் மிகச்சிறந்த ஜோடி என்றால் அது கமல்-ஸ்ரீதேவி என அனைவருமே சொல்லும் அளவுக்கு புகழ் பெற்றனர்.

இந்நிலையில் துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்பேற்பதற்காக சென்ற ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

அவரது இறப்புக்கு அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் மூன்றாம் பிறை படத்தின் பாடல் காதில் ஒலிக்கிறது. இந்த குழந்தை கன்னி மயிலாக, கண்ணியமிக்க மனைவியாக, பாசமிக்க தாயாக, படிப்படியாக மாறியதை நினைத்து மகிழ்ந்தவன் நான்..இதையும் நாள் பார்க்க நேர்ந்தது கொடுமையதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்  என தெரிவித்துள்ளார்.