இந்தியன் 2 படத்திற்காக தைவான் பறந்த படக்குழு! இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட புகைப்படம்..!
நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்புக்காக படக்குழு தற்போது தைவான் சென்றுள்ள தகவலை இயக்குனர் ஷங்கர் புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கிய நிலையில், தற்போது முழு வீச்சில் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் ஷங்கர். இதுவரை இந்தியாவிலேயே படப்பிடிப்பை நடத்தி வந்த இயக்குனர் ஷங்கர்... தற்போது தைவானில் 'இந்தியன் 2' படப்பிடிப்பை நடத்த உள்ளார்.
ஏற்கனவே நடிகர் கமல் ஹாசன் தைவான் சென்றுவிட்ட நிலையில், இயக்குனர் ஷங்கர் மற்றும் துணை இயக்குனர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இன்று தான் தைவான் சென்றுள்ளதாக தெரிகிறது. சற்றுமுன் இயக்குனர் ஷங்கர் தைவான் நாட்டிற்கு சென்றுள்ளதை அதிகார பூர்வமாக, தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தைவானில் நடைபெற உள்ள 'இந்தியன் 2' பட ஷூட்டிங் குறித்து, வெளியாகியுள்ள தகவலில்... 'தைவானில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு 8 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளதாகவும், இதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ஒரு பாடல் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தைவானியின் படப்பிடிப்பை முடித்த பின்னர் ’இந்தியன் 2’ படக்குழு தென் ஆப்பிரிக்கா செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் அதுவே இறுதி கட்ட படப்பிடிப்பாக இருக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன".
கமல் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக, காஜல் அகர்வால் நடிக்கிறார், மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.