இனி கமலை வைத்து அவர் ‘தேவர் மகன் 2’ வை இயக்கப்போகிறார். ‘சபாஷ் நாயுடு பார்ட் 2’வில் ஜாதிக் கலவரத்தைத் தூண்டவிருக்கிறார் என்றெல்லாம் விவாதமேடைகளில் பஞ்சாயத்து கூட்ட முடியாது. ஷங்கருடன் ‘இந்தியன் 2’ வை முடித்த கையோடு சினிமாவுக்கு தெளிவாக குட் பை சொல்கிறார் கமல்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி தனது ‘மக்கள் நீதி மய்யம்’ என்னும் அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்த கமல், ரஜினியோடு ஒப்பிடுகையில் மிகவும் பரபரப்பாகவே அரசியல் செய்தார். மக்கள் பிரச்சினைகளுக்காக தூத்துக்குடி முதல் கஜா புயல் வரை களத்தில் இறங்கி வேலைசெய்தார். பல கிராமப் பஞ்சாயத்துக் கூட்டங்களையும் வெற்றிகரமாக நடத்தி ஆச்சரியமூட்டினார்.

ஆனாலும் சினிமாவை விட்டு முழுநேர அரசியலில் அவர் எப்போது இறங்குவார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்துகொண்டே இருந்தது. அதிலும் இந்தியன் பார்ட் 2’ அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், அவர் சொல்லாமலே ‘தேவர் மகன்2’, ‘புன்னகை மன்னன்2’ என்று கப்ஸா புராஜக்டுகள் வரிசையாகக் கிளப்பிவிடப்பட்டன.

இந்த வதந்தியாளர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘இந்தியன்2’ தான் தனது கடைசிப் படம் என்றும், அதற்குப் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபட முடிவெடுத்திருப்பதாகவும் இன்று கமல் அறிவித்திருக்கிறார். இதனால் ‘களத்தூர் கண்ணம்மா பார்ட் 2’ வரை கமலைக் கோர்த்துவிட நினைத்தவர்கள் கதிகலங்கி நிற்கிறார்கள்.