சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் 31ம் தேதி தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக இருந்தார். அதற்குள் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கை முடிப்பதற்காக ஐதராபாத் சென்றார். கடந்த 14ம் தேதி அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தொற்று இல்லை என்றாலும், அவர் ஐதராபாத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். 

அப்படியிருக்க ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அதற்கு முன்னதாக கொரோனா தொற்று ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்கி கொள்ள வேண்டாம் என்றும், மன உளைச்சல் ஏற்படும் படியான வேலைகளில் ஈடுபடக்கூடாது, ஒருவாரம் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். 


 
இதையடுத்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்தார். இதையடுத்து திரையுலகினர் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.  இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கமல் ஹாசன், என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சாரக் கூட்டம் மயிலாடுதுறையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “பிரச்சாரப் பயணம் முடிந்தபின் சென்னை சென்று ரஜினியை சந்திப்பேன். என்னைப் பொறுத்தவரை ரஜினியின் ரசிகர்களின் மனநிலைதான் எனக்கும். சற்றே ஏமாற்றம் இருந்தாலும், அவரது ஆரோக்கியம் எனக்கே மிக முக்கியமான விஷயம். என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.