சென்னை: தமிழ் திரையுலகிலும், நிஜவாழ்விலும் சிறந்த நண்பர்களாகவும் திகழ்ந்து வந்த உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகை கவுதமி இருவரும் 13 ஆண்டுகளுக்குப் பின் பிரிகின்றனர். 

சுமார் 13ஆண்டு காலம் கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த கவுதமி சில காரணங்களால் கமலை பிரிவதாக தானது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

அவரது பகிர்வில், மிகுந்த மன வேதனையுடன் கமல் ஹாசனை பிரிகிறேன். 13 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்துவிட்டு தற்போது கமலை பிரியும் இந்த முடிவு என் வாழ்வில் மிகவும் கொடுமையானது, இதயத்தை நொறுக்குவதுபோல் இந்த முடிவை எடுத்துள்ளேன். சேர்ந்து வாழும் உறவில் இருவரது பாதையும் நேர்மாறாக இருக்கும் பட்சத்தில், ஒருவரது கனவுகளை சமரசம் செய்து கொண்டு, உண்மை சூழலை ஏற்றுக் கொண்டு மற்றொருவரது பாதையில் செல்ல வேண்டிய நிர்பந்தமுள்ளது' என கூறியுள்ளார்.



மேலும், யாரையும் குறை சொல்வதோ, அனுதாபம் தேடுவதோ என் நோக்கமல்ல என்று கூறியுள்ள கவுதமி, அனைத்துக்கும் மேலாக சிறந்த தாயாக செயல்பட வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும், எனது மகளின் எதிர்காலம் கருதி கமலை பிரிவதாகிறேன் என கவுதமி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை. காலமாற்றத்திற்கு ஏற்றவாறு மனிதர்கள் மாறுவார்கள். அதுபோன்ற ஒரு சூழலில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வாழ்க்கையை சந்தோஷமாக வாழ எந்த ஒரு உறவிலும் மன நிம்மதி அவசியம். கமல் ஹாசனுடன் ஆலோசித்த பிறகே இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் விளக்கமளித்துள்ளார்.

சுமார் 2 ஆண்டுகளாக தீவிரமாக யோசித்த பிறகே மிகுந்த மன வருத்தத்துடன் இம்முடிவை எடுத்துள்ளேன். திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பில் இருந்தே தான் கமல் ஹாசனின் தீவிர ரசிகை. இனியும் ரசிகையாக அவரது வெற்றிகளை ரசிப்பேன்.

இந்த 29 ஆண்டுகால நட்பில் கமலிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். எனது வாழ்வின் மிக கடுமையான தருணங்களில் என்னுடன் துணை நின்றதற்கு பல வகையில் நன்றி கடன்பட்டுள்ளேன். 



 கமலஹாசன் முதலில் வாணி கணபதி என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். வாணியை விவாகரத்து செய்த பிறகு இந்தி நடிகை சரிகா உடன் சேர்ந்து வாழ்ந்தார். சுருதி, அக்ஷரா ஆகியோர் பிறந்த பிறகு தான் சரிகா - கமல் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. சரிகாவை விட்டு பிரிந்த கமலுடன் நடிகை கவுதமி சேர்ந்து வாழ்ந்தார். இப்போது கவுதமியையும் பிரிகிறார் கமலஹாசன்.