நடிகர் கமல்ஹாசன் 'விஸ்வரூபம் 2', 'சபாஷ் நாயுடு' படங்களைத் தொடர்ந்து 'தலைவன் இருக்கிறான்' என்ற தலைப்பில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியாகியது. ஆனால், விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு திட்டமிட்டபடி சபாஷ் நாயுடு படத்தை எடுக்க முடியவில்லை.

 பல்வேறு பிரச்சனைகளால் அந்த படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நிற்கிறது. இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சி, அரசியல் கட்சி அறிவிப்பு என கமல் பிஸியாக, சபாஷ் நாயுடு படம் கிடப்பில் போடப்பட்டது.  அதே நேரத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் கமல் – ஷங்கர் கூட்டணியில் இந்தியன் 2 பட அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2017- ஆம் ஆண்டு அறிவித்த தலைவன் இருக்கிறான் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கமல்ஹாசனுடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், கமல்ஹாசனுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாகவும், ஆர்வாகமாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்த ட்விட்டை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள கமல்ஹாசன், உங்கள் பங்களிப்புடன் எனது அணியை வலுப்படுத்தியதற்கு நன்றி. சில திட்டங்களை உருவாக்கும் போது நன்றாகவும், சரியானதாகவும் உணர முடியும். தலைவன் இருக்கிறான் அத்தகைய ஒன்றாகும். இதற்காக உங்கள் உற்சாகத்தின் நிலை மிகவும் அளப்பரியதாகும். அதை என் மற்ற குழுவினருக்கும் பரப்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

தமிழ், ஹிந்தி ஆகிய இரண்டு மொழிகளில் இப்படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. பொருளாதாரம், நிழல் உலகம் மற்றும் அரசியல் கோட்பாடுகளை மையப்படுத்தியது என இப்படத்தைப் பற்றி முன்பே கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.