’சுப்பிரமணியபுரம்’ படத்தின் ஒன்றுவிட்ட தம்பிகள் போல் நடிகர் பிரித்வி ராஜும் அவரது நண்பர்களும் தோற்றமளிக்கும் ‘காதல் முன்னேற்றக் கழகம்’ படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டுவிழா நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. 

படம் பற்றி இயக்குநர் மாணிக் சத்யா பேசும்போது, “இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை. கதாநாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர்.அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது ,இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக இருப்பவர்.

துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப் படுவது நம்பிக்கை துரோகம் தான்..அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது… அதைத்தான் இதில் சொல்லி இருக்கிறோம். யதார்த்தமான கதையாக படம் வந்திருக்கிறது. கிராமப்புற வாழ்வியலை பதிவிட்டிருக்கிறோம்.. படத்தை பார்த்த பாண்டியராஜன் சார் பாராட்டியதுடன் 15 மிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கிறது என்று சொன்னார்’ என்கிறார்.

பின்னர் தனது மகனுக்கு மேடையிலேயே சில அறிவுரைகளை வழங்கிய பாண்டியராஜன் சினிமா உலகம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்த தன் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றைக் கூறி பார்வையாளர்களை திகைக்கவைத்தார்.

‘நான் எப்போதும் எனது பிறந்த நாளை நண்பர்களோடு பிரியாணி சாப்பிட்டுக்கொண்டாடுவேன். அது ‘பாட்டி சொல்லைத்தட்டாதே’ ரிலீஸாகியிருந்த வருடம். வாழ்த்துச்சொல்ல வருபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருக்கும் என்பதால் நண்பர்கள் ஒரு திருமண மண்டபத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். காலை 9 மணியிலிருந்தே மாலைகள் குவிய ஆரம்பித்தன. மதியம் மணி ரெண்டாகியும் கூட்டம் குறைந்தபாடில்லை. அட பசிக்குது போங்கப்பா மாலைகள் போதும் என்று மண்டபத்தை விட்டு ஓடிவிட்டேன். அடுத்த சில நிமிடங்களில் மண்டப உரிமையாளர்கள் போன் செய்து மாலைகளை அப்புறப்படுத்தலாமா என்று கேட்டபோது நான் சரி என்று சொன்னேன். அதற்கு அவர்கள் அவ்வளவு மாலைகளையும் அப்புறப்படுத்த வேண்டுமானால் லாரி வைத்து ரெண்டு லோடுகள் அடிக்கவேண்டியிருக்கும் என்று கேட்க, உடனே லாரி வாடகைக்கு பணம் கொடுத்து அனுப்பினேன்.

அடுத்த வருடம் அதே பிறந்த நாள் சரி போன வருஷம் அளவுக்கு கூட்டம் வந்தாலும் வீட்டில்லேயே வைத்து சமாளிப்போம் என்று முட்வி செய்து மாலைகளுடன் வாழ்த்த வருபவர்களுக்காக காத்திருந்தேன். அன்று மதியம் வரை வந்தவர்கள் மொத்தம் ரெண்டேபேர்தான். அதுவும் மிகவும் மெலிந்த பரிதாபமான மாலைகளோடு. இதுதாண்டா மகனே சினிமா’ என்று பாண்டியராஜன் முடித்தபோது அரங்கமே அதிர்ந்தது கரவோஷங்களால்.