விக்ரமுக்கு கடைசியாக வெளியான ‘இருமுகன்’,’ஸ்கெட்ச்’,’சாமி2’ ஆகிய மூன்று படங்களுமே கமர்சியலாக வெற்றியடையாததால் கமலின் தயாரிப்பான ‘கடாரம் கொண்டான்’விற்பனையாவதில் பெரும் இழுபறி ஏற்ப்பட்டதாகவும் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் எல்லா தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் படம் ’கடாரம் கொண்டான்’.அரசியல் பணி, பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் என நெருக்கடியான நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கமல்ஹாசன் தயாரித்திருக்கும் படம். ராஜ்கமல் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் படங்களுக்கு சந்திரஹாசன் இணை தயாரிப்பாளராக இருப்பார். அவர் காலமாகிவிட்டதால் அவர் பங்கு பெறாத முதல் படமாகத் தயாராகி இருக்கிறது கடாரம் கொண்டான்.

தமிழ் சினிமாவில் அடுத்த கமல்ஹாசன் எனக் கூறப்படும் விக்ரம், கமல் மகள் அக்க்ஷரா ஹாசன் நடித்துள்ள கடாரம் கொண்டான் படத்தை முதல் பிரதி அடிப்படையில் டிரைண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்குத் தயாரித்துக் கொடுத்துள்ள இந்தப் படத்தின் தமிழக உரிமை மொத்தமாகவோ, ஏரியா அடிப்படையிலோ அவுட்ரேட் முறையில் வியாபாரம் நடைபெறவில்லை.விக்ரம் இரட்டை வேடங்களில் நாயகனாக நடித்து 2016 இறுதியில் வெளியான ’இருமுகன்’ அதன்பின் அவரது நடிப்பில் 2018ஆம் வெளியான ஸ்கெட்ச், சாமி - 2 ஆகிய மூன்று  படங்களும் வசூல் அடிப்படையில் தோல்வியைத் தழுவிய படங்கள்.

இதனால் நாளை மறுநாள் ரிலீஸாகவிருக்கும் ‘கடாரம் கொண்டானுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் அவ்வளவாக ஆர்வம் இல்லையாம். கடந்த வாரம் வரை இப்படம் தமிழகத்தின் ஒரு ஏரியாவில் கூட விலைபோகாத நிலையில் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸே தமிழகம் முழுவதும் படத்துக்கு தியேட்டர்கள் எடுத்து ரிலீஸ் பண்ணுவதாகத் தகவல். சுமார் 25 கோடியில் தயாராகியிருக்கும் இப்படம் ஓரளவுக்காவது வெற்றிபெறாவிட்டால் பிக்பாஸுக்கு பிக் லாஸ் வரும் என்று தெரிகிறது.