kadambur raju press meet

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத கேளிக்கை வரியை குறைக்க முடியாது என அமைச்சர் கடம்பூர் ராஜு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்டதை அடுத்து, கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்திற்கான ஜி.எஸ்.டி வரி 18%-லிருந்து 28 %-மாக உயர்த்தப்பட்டது.

இந்தநிலையில், திரையரங்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிக்கெட் கட்டணத்தை கொண்டுவர வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தமிழக அரசு டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்து அறிவிப்பு ஒன்றை கடந்த 7-ம் தேதி வெளியிட்டது.

அதன்படி, 160 ரூபாயுடன் ஜிஎஸ்டி சேர்த்து 192 ரூபாய் வரை தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இந்த புதிய விலை விகிதம் இன்று முதல் அமலுக்கு வருவதாக இருந்தது. இந்நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று பழைய கட்டணத்திலேயே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று திரையங்குகள் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தநிலையில், கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்றும், சினிமா துறைக்கு மணி மண்டபம் கட்டிவிடாதீர்கள் எனவும், நடிகர் சங்க செயலாளர் விஷால் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் கேளிக்கை வரியை குறைப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, அவர் 10 சதவீத கேளிக்கை வரி என்பது சினிமா துறைக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை எனவும் அவர் தெரிவித்திருப்பது சினிமா துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.