தற்போதைய டாப் பிசி ஹீரோயின்களுக்குப் போட்டியாக அடுத்தடுத்து படங்கள் கமிட் பண்ணி நடித்துவரும் ஜோதிகா, இனி முழு நேர நடிகையாக மாறி வருடத்துக்கு 4 படங்களுக்கும் மேல் நடிக்கும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இவரது ‘ராட்சசி’படம் ரிலீஸாகி சுமாராக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு படத்தையும் அதிரடியாகத் துவங்கினார். இந்த தொடர் பட அறிவிப்புகளால் ‘19ம் ஆண்டின் அதிக படங்களில் நடித்த ஹீரோயின் என்ற பெயரை ஜோதிகா பெறுவது உறுதியாகியுள்ளது.

சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள் படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்த ஜோதிகா மீண்டும் ‘36 வயதினிலே’படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.அடுத்து ‘மகளிர் மட்டும்’,’நாச்சியார்’,’செக்கச்சிவந்த வானம்’ என்று தொடர்ச்சியாக நடித்து வந்த ஜோதிகா இந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார். அரசுப் பள்ளி ஆசிரியையாக அவர் அசத்தியிருக்கும் ‘ராட்சசி’ இந்த மாதம் திரைக்கு வந்து ஓரளவு சுமாராக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தொடர்ந்து குடும்பப்படங்களை மட்டுமே  தயாரித்துக் கொண்டிருக்கும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது அடுத்தப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
கதையின் நாயகியாக ஜோதிகா  நடிக்கும் இப்படத்தில்  பாரதிராஜாவின்  மூன்று சீடர்களான பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன்  ஆகிய மூவரும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
பிரதாப் போத்தனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.”பொன்மகள் வந்தாள்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எழுதி இயக்குபவர் ஜே ஜே ப்ரட்ரிக்,  இவருக்கு இது முதல்படம். .
தன் கேமராக் கண்கள் மூலம் ரசிகர்களின் கண்களுக்கு  விருந்தளிக்கும் ராம்ஜி இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.  இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா  இப்படத்தின் இசை அமைப்பாளர்.படத் தொகுப்பாளராக ரூபனும், ஆர்ட் டைரக்டராக அமரனும் பொறுப்பேற்றுள்ளனர் . 

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் படத்தின் பூஜை இன்று காலையில் மிகப்பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.பூஜையில்   சிவகுமார்,   2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, நடிகர் கார்த்தி, இயக்குநர்கள், ஹரி, பிரம்மா, முத்தையா, ஞானவேல், 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, எஸ்.ஆர் பிரகாஷ் பாபு விநியோகஸ்தர்பி.சக்திவேலன்  ஆகியோரும்,மற்றும் படத்தின் நட்சத்திரங்கள் ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் படத்தின் இயக்குநர் பெட்ரிக் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.