தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் (Jhanvi Kapoor), வலிமை (Valimai) படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 2-வது படம் வலிமை. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக வலிமை தயாராகி உள்ளது.

இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். 

யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 13-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படம் ரிலீசாக உள்ளது.

அதேபோல் அமெரிக்காவில் ஒருநாள் முன்னதாக ஜனவரி 12-ந் தேதியே ரிலீசாக உள்ளது. இதற்கான முன்பதிவு அங்கு தொடங்கி உள்ளது. அதன்படி ஆன்லைன் டிக்கெட் பதிவு தளத்தில் வலிமை படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் போனி கபூரின் மகள் ஜான்வி கபூரின் பெயரும் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

ஒரு வேளை அவர் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கலாம் என கருதப்படுகிறது. இது உறுதியானால் அவர் நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாக அமையும். இதைப்பார்த்த ரசிகர்கள், இவ்ளோ நாளா இத மறச்சிட்டீங்களே போனி என கமெண்ட் செய்து வருகின்றனர்.