டிசம்பர் 21ம் தேதி ரிலீஸாகி தியேட்டர்களில் சுமாருக்கும் கீழே வரவேற்பு பெற்ற தனது ‘அடங்க மறு’ படத்துக்கு திடீரென சக்சஸ் மீட் நடத்தி பத்திரிகையாளர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கினார் நடிகர் ஜெயம் ரவி. தனது மனைவி மற்றும் மாமியாரின் தொல்லைதாங்காமல் ‘பயம் ரவியாக மாறி,  அவர் இந்த திடீர் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.

டிசம்பர் 21 ரிலீஸ்களில் சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’, தனுஷின் ‘மாரி 2’ கன்னட டப்பிங் படமான ‘கே.ஜி.எஃப்’ ஆகிய படங்களை விட மட்டமான வசூலையே குவித்த ‘அடங்க மறு’ தற்போது ஒரு சில தியேட்டர்களில் சிங்கிள் ஷோவாக மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்த ஜெயம் ரவி படம் பெரிய ஹிட் என்று அறிவித்தார். பின்னர் பேசிய ஜெயம் ரவி,’ ‘இந்த படத்தை என் மாமியார் சுஜாதா தயாரித்து இருந்தார். என் மனைவி ஆர்த்தி எனக்கு அடங்கி இருந்தது என்பது இந்த படத்தில் நான் நடித்த சமயத்தில் மட்டும்தான்.

ஆர்த்தி ஏதாவது சண்டை போட்டால் படப்பிடிப்புக்கு செல்லமாட்டேன் என்று பிளாக்மெயில் செய்ய தொடங்கினேன். என்னுடன் சண்டை போடுவதற்காகவே படப்பிடிப்பை சில நாட்கள் நிறுத்த முடியுமா? என்று அம்மாவிடம் ஆர்த்தி கேட்பார். அந்த அளவுக்கு அவரை அதட்டி வைத்து இருந்தேன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும்வரை என்னிடம் அவர் அடங்கியே இருந்தார்’ என்று கூறினார். இதை கேட்டு மேடையில் இருந்த ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும், மாமியார் சுஜாதாவும் சிரித்தனர்.