It is not right to ban the kaala film in Karnataka rajinikanth speech
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள, 'காலா' திரைப்படம் நாளை மிகவும் பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
ஏற்கனவே ரஜினிகாந்த் மற்றும் ரஞ்சித் கைகோர்த்த, 'கபாலி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது, 'காலா' படத்திற்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆனால் 'காலா' படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம் என கர்நாடக பிலிம் சேம்பர் எதர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை தான், தானும் கூறியதாக விளக்கம் அளித்தார்.
திரைப்பட வெளியீட்டுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கர்நாடக பிலிம் சேம்பரே, படத்தை வெளியிட விடாமல் தடுப்பது ஏற்புடையதல்ல என்று கூறிய அவர், நீதிமன்ற உத்தரவின்படி, படத்துக்கு பாதுகாப்பு தர கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் காவிரி விவகாரத்துக்காக, கர்நாடகாவில் காலா படத்துக்கு தடை விதிப்பது சரியல்ல என்று கூறியுள்ளார்.
