இசைஞானி இளையராஜாவிற்கும் பிரசாத் ஸ்டூடியோவிற்கும் ஏற்பட்ட பிரச்சனை அனைவரும் அறிந்தது. தான் கைப்பட எழுதிய இசைக்கோப்புகள், இசைக்கருவிகள், விருதுகள் ஆகியன இருப்பதால் பிரசாத் ஸ்டூடியோவிற்குள் சென்று அதனை எடுத்துக் கொள்ளவும், தியானம் செய்யவும் அனுமதி கேட்டு இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது முதலில் முரண்டு பிடித்தாலும்,  பின்பு சில நிபந்தனைகளுடன் அனுமதிக்க பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது.

இதையடுத்து டிசம்பர் 28-ம் தேதி இளையராஜா பிரசாத் ஸ்டுடியோ வரவுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால், அவர் வரவில்லை. அதோடு அவரது அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்கள் குடோனில் வைக்கப்பட்டதால், சர்ச்சை எழுந்தது. பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினரின் இந்த முடிவுக்கு இளையராஜா ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய, மாநில அரசுகள் மவுனமாக இருப்பதால் தனக்கு அளிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை திருப்பி அனுப்ப இளையராஜா முடிவு செய்துள்ளதாக, இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தீனா, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 


இந்த தகவல் ஊடகங்களில் தீயாய் பரவிய நிலையில் இளையராஜா அதிரடி விளக்கம் அளித்துள்ளார். அதாவது பத்ம விருது குறித்து நான் எதையும் சொல்லவில்லை என்றும், நான் சொல்லாத ஒரு கருத்து ஊடகங்களில் பரவி வருவதாகவும் பிரபல தொலைக்காட்சி மூலமாக இளையராஜா விளக்கமளித்துள்ளார்.  இது கோலிவுட்டில் மற்றொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.