நான் என்னை இசைஞானியாக நினைக்கவில்லை... அதில் எவ்வித கர்வமும் எனக்கில்லை - இளையராஜா ஓபன் டாக்
‘மால்யதா’ என்கிற ஆங்கில புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இசைஞானி இளையராஜா சிறப்புரை ஆற்றினார்.
ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும் ‘மால்யதா’ என்கிற ஆங்கில புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அதேபோல் இசைஞானி இளையராஜாவும் இந்த விழாவில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது : “மாதத்தின் 30 நாளும் எனக்கு வேலை இருக்கும். காலை ஒரு பாட்டு, மதியம் ஒரு பாட்டு என அந்த காலத்தில் கால்ஷீட் கொடுத்து வேலை பார்ப்பேன். ஆனால் இப்போ கால்ஷீட் எல்லாம் கிடையாது. இப்போலாம் இரவு பகலா வேலை பார்க்கிறார்கள். இப்போ ஒரு பாட்டு பண்ண ஆறு மாதங்கள் ஆகிறது. ஏன் ஒரு வருஷம் எடுத்தவர்களெல்லாம் இருக்கிறார்கள். அப்படி செய்பவர்களை குறைசொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. அவர்களுக்கு அது வரல, வந்தாதான போடுவாங்க.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் தொடரும் வசூல் வேட்டை... பாகுபலி 2 சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கி முதலிடம் பிடித்த சலார்
நான் கர்நாடக சங்கீதத்தில் கரைகண்டு வந்தவன் அல்ல. என்னைப் பொருத்தவரை இசைஞானி என்கிற பெயருக்கு நான் தகுதியானவனா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான். ஆனால் மக்கள் இசைஞானி என்று அழைக்கிறார்கள் அதை வணங்குகிறேன். ஆனா நான் அந்த மாதிரி நினைக்கல, அதனால எனக்கு எந்தவித கர்வமும் கிடையாது. அந்த கர்வத்தையெல்லாம் நான் சிறுவயதிலேயே தூக்கி எறிந்துவிட்டேன்.
சிறுவயதில் நான் கச்சேரியில் ஹார்மோனியம் வாசிக்கும்போது எல்லாரும் கைதட்டுனாங்க. கைதட்ட தட்ட பெருமையாக இருந்தது. நிறைய கற்றுக்கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். இந்த கைதட்டல் அதிகரித்ததும் எனக்கு கர்வமும் அதிகமானது. ஒருகட்டத்தில் இந்த கைதட்டல் யாருக்கானது என்று யோசிக்க தொடங்கினேன். அப்போது தான் அவர்கள் நான் இசைக்கும் டியூனுக்காக கைதட்டுகிறார்கள் என்பதை அறிந்தேன். அதுவும் நான் எம்.எஸ்.வி.யின் ஹிட் பாடல்களை தான் வாசிப்பேன். அதனால் அந்த கைதட்டல்கள் எல்லாம் அவருக்கானது என்பது புரிந்ததும் கர்வத்தை தூக்கி எறிந்தேன்” என இளையராஜா கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... 16 லட்சம் பணப்பெட்டியோடு பிக்பாஸில் இருந்து வெளியேறிய பூர்ணிமாவுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - இத்தனை லட்சமா?