நடிகர் சூரி, விமல் உள்ளிட்டோர் கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் தடையை மீறி மீன் பிடித்ததால் அபராதம் விதிக்கப்பட்டு தங்களது உண்மை முகத்தை உலகிற்கு காட்டியுள்ளனர்.

நடிகர்கள் விமல், சூரியுடன் 2 இயக்குனர்கள் கடந்த 17-ம்தேதி கொடைக்கானல் வந்துள்ளனர். இங்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பேரிஜம் ஏரிக்கு வனத்துறையிடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற்றுதான் செல்லவேண்டும். ஆனால் இவர்கள் அனுமதி பெறாமல் ஏரிக்கு சென்று மீன்பிடித்து உள்ளனர். இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியானது. இதையடுத்து சமூக ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் போலீசில் புகார் அளித்ததுடன் வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி தேஜஸ்வி கூறுகையில், ’’வனத்துறை அதிகாரிகள் இல்லாத நிலையில் சில ஊழியர்கள் உதவியுடன் நடிகர்கள் விமல், சூரி உள்பட சிலர் பேரிஜம் ஏரிக்கு அனுமதி இன்றி சென்றுள்ளனர். இது குறித்து தற்போது தான் தகவல் வந்துள்ளது. தடை விதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற இவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. மோயர்பாயிண்ட் என்ற இடத்தில் உள்ள இரும்பு கேட்டை திறந்து தான் வாகனங்கள் செல்ல வேண்டும். ஆனால் அந்த கேட்டை திறந்து விட்டு அவர்களுடன் சென்ற வன ஊழியர்கள் யார்? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனக் கூறினார்.

 

இதனிடையே நடிகர்கள் விமல், சூரி தரப்பினர் இ-பாஸ் பெற்று கொடைக்கானலுக்கு வந்தார்களா? அல்லது இல்லாமல் வந்தார்களா? என்பது குறித்து நகராட்சி அதிகாரிகளும், பல்வேறு துறை அதிகாரிகளும் விசாரித்தனர். கொரோனா காலத்தில் இதே சூரியும், விமலும் வீடியோ வெளியிட்டு தங்களது சமூகப்பற்றை வெளிப்படுத்தினர். சூரி வெவ்வேறு வீடியோக்களை வெளியிட்டு மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் எனக் கெட்டுக் கொண்டார். காவல் நிலையம் சென்று காவலர்களை உற்சாகப்படுத்தினார். மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். மக்கள் வெளியில் செல்ல வேண்டாம் எனக்கூறி மன்றாடி வீடியோக்களை வெளியிட்டார். விமல் தனது சொந்த ஊருக்கு சென்று கிராமம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளித்தார். கபசுரக் குடிநீர் வழங்கி மக்கள் மீது கொண்ட அக்கறையை வெளிப்படுத்தினார்.

அப்படிப்பட்ட சமூக அக்கறையாளர்கள் ஊருக்கு மட்டும் உபதேசம் செய்து விட்டு கொரோனா உச்சத்தில் இருக்கும் நேரத்தில் பொறுப்பின்றி தடைகளை மீறி கொடைக்கானல் சென்று, உள்ளே செல்ல தடைவிதிக்கப்பட்ட பேரிஜம் ஏரிக்குள் செல்ல வனதுறை ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து ஏரி மீனைப்பிடித்து ஜாலியாக இருந்து வந்துள்ளனர். இதன மூலம் அவர்களது சமூகப்பற்று எத்தகையது என்பது அம்பலமாகி உள்ளது.