Ippadai vellum movie Review
ராதிகா கணவர் இறந்த பிறகு திருவண்ணாமலை அரசுப் பேருந்து ஓட்டுநர் வேலையை ஏற்கிறார் ராதிகா. மகன் உதயநிதி 75 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் இன்ஜினியர். இவர் தனது அம்மாவின் ஆசைப்படி லோன் வாங்கி சொந்த வீடு கட்டுகிறார். திடீரென ஆள்குறைப்பு நடவடிக்கையால் ஐடி வேலையும் பறிபோகிறது. சென்னையில் ஐ.டி. துறையில் வேலையே இழந்த நிலையில் இருக்கும் நாயகன் உதயநிதி மஞ்சிமாவின் காதல் கதை மஞ்சிமா மோகனின் அண்ணன் போலீஸ் அதிகாரியான ஆர்.கே.சுரேஷுக்கு தெரியவருகிறது. மஞ்சிமா மோகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்களை பிரிக்கவும் முயற்சி செய்கிறார். இந்நிலையில், உதயநிதியும், மஞ்சிமா மோகனும், பதிவு திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்.

இதற்கிடையில், தீவிரவாதியான டேனியல் பாலாஜி வட இந்தியாவில் வெடிகுண்டுகளை வைத்து விட்டு, சென்னையில் வெடிகுண்டு வைப்பதற்காக வருகிறார். எதிர்பாராத விதமாக, உதயநிதியையும், சூரியையும் சந்தித்து செல்கிறார். இவர்களின் சந்திப்பு சிசிடிவி கேமராவில் சிக்கிவிடுகிறார்கள். இதனால் டேனியல் பாலாஜிக்கும், உதயநிதிக்கும் சம்மந்தம் இருப்பதாக கருதி போலீஸ் அவர்களை கைது விடுகிறார்கள்.

இதுதான் சமயம் என்று பிளான் போடும் நாயகியின் அண்ணன் ஆர்.கே.சுரேஷ் உதயநிதியை என்கவுண்டர் செய்ய முயற்சிக்கிறார். இறுதியில் ஆர்.கே.சுரேஷின் என்கவுண்டரில் இருந்து தப்பித்து, டேனியல் பாலாஜிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று நிருபித்தாரா? நாயகி மஞ்சிமா மோகனுடன் இணைந்தாரா? டேனியல் பாலாஜியை பிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
உதய் கடைசியாக நடித்த மனிதன் படத்துக்கு பிறகு மிகவும் ஒரு வித்தியாசமான ஒரு நடிப்பு அதே போல நடனம் என்று அனைத்திலும் அருமை என்று சொல்லும் அளவுக்கு நம்மை வியக்க வைத்துள்ளார்.

மஞ்சிமா மோகன் காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அண்ணனுக்கு பயப்படுவது, துணிச்சலாக திருமணம் செய்து கொள்ள தயாராகுவது என நடிப்பில் பளிச்சிடுகிறார். ராதிகா என்றால் நடிப்புக்கு சொல்லவா வேணும் அப்படி ஒரு நடிப்பு மிக சிறந்த தைரியசாலி என்று தான் சொல்லணும் பஸ் ட்ரைவர் போலவே இருக்கிறார்.
சூரியின் காமெடி இப்படத்திற்கு கைக்கொடுத்திருக்கிறது. உதயநிதியுடன் இவர் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிக்க வைத்திருக்கிறது. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், தங்கையின் காதலுக்கு எதிரியாகவும், வில்லத்தனத்திலும் மிரட்டியிருக்கிறார். அதுபோல் தீவிரவாதியாக வரும் டேனியல் பாலாஜியும் சிறப்பாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார்.

ஆரம்பத்தில் படத்தின் திரைக்கதை மெதுவாக நகர்ந்தாலும், போக போக திரைக்கதை சூடுபிடிக்கிறது. உதயநிதி, சூரி, டேனியல் பாலாஜி என ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத மூன்று பேரின் வாழ்க்கையை இணைத்து, ஒரு ஆக்ஷன் த்ரில்லரை உருவாக்குவது சவாலான காரியம்தான். அதற்கென பொருத்தமான கதையையும் தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர். இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம், பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்றார் போல் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்.

தூங்கா நகரம், சிகரம் தொடு, ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த, கௌரவ் நாராயணன் தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு சிறந்த படத்தை கொடுத்துள்ளார் என்று தான் சொல்லணும். தனது முதல் இரண்டு படங்களை போல ஒரு சிறந்த "த்ரில்லர்" கதைக்களத்தோடு வந்து வெற்றி கண்டுள்ளார். தன் கதைக்கு என்ன தேவையோ அதை தவிர தேவை இல்லாமல் கதையோ ஓட்டத்தை விட்டு வெளியில் போகாமல் மிக சிறப்பாக செய்துள்ளார். லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உதயநிதி, மஞ்சிமா மோகன், சூரி, ராதிகா, டேனியல் பாலாஜி, ஆர் கே சுரேஷ் நடிப்பில் வந்த "இப்படை வெல்லும்" வென்றுள்ளது.
