இந்தியாவில் ஆஃப் ரோட் ரேஸிங்கை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள முதல் திரைப்படம் "Muddy". ஆஃப் ரோட் ரேஸிங் அணிகளுக்கு இடையேயான மோதல்களை மையமாக கொண்டு, அதை சாகசம், காமெடி, என கமெர்சியல் திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களுடனும் உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் பிரகபால்.  

ஆஃப் ரோட் ரேஸிங் காட்சிகள் எல்லாம் அபாயகரமான இடங்களில் படமாக்கப்பட்டிருப்பதால், ஆக்‌ஷன் திரில்லர் கலந்த இத்திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவமாக இருக்கும்.

PK7 கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரேமா கிருஷ்ணதாஸ் தயாரித்துள்ள இந்த படத்தில், அறிமுக நடிகர் ஐ.எம்.விஜயன் கதாநாயகனாக நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான ரெஞ்சி பானிக்கர், ஹரீஷ் பெராடி, கின்னஸ் மனோஜ், ஷோபா மோகன் மற்றும் சுனில் சுகாதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கேஜிஎஃப் திரைப்படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் கேஜி ரதீஷின் ஒளிப்பதிவு, ராட்சசன் எடிட்டர் சான் லோகேஷின் படத்தொகுப்பு என மிகச்சிறந்த டெக்னீசியன்களின் உழைப்பில் உருவாகியிருப்பதால் “Muddy" திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்தின் மோஷன் பிக்சரை விஜய் சேதுபதி மற்றும் கன்னட நடிகர் ஸ்ரீ முரளி ஆகிய இருவரும் ஒரு வாரத்திற்கு முன் வெளியிட்ட நிலையில், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது.

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் இந்தி டீசரை வெளியிட்ட நிலையில், தமிழ் டீசரை ஜெயம் ரவியும், கன்னட டீசரை கன்னட நடிகர் சிவராஜ் குமாரும், தெலுங்கு டீசரை அனில் ரவியும் ரிலீஸ் செய்தனர்.

மலையாள டீசரை நடிகர்கள் ஃபஹத் ஃபாசில், உன்னி முகுந்தன், அபர்னா பாலமுரளி, ஆசிஃப் அலி, சிஜு வில்சன் மற்றும் அமித் சக்கலாக்கல் ஆகியோர் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர்.