நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கொள்ளுப்பேரனும்  விக்ரம் பிரபுவின் மகனுமான  விராட்டிற்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை அனுப்பி தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்த வீடியோவை பிரபு மற்றும் விக்ரம் பிரபுவின் ரசிகர்கள் வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு, 'கும்கி' திரைப்படத்தில் அறிமுகமாகி 'இவன் வேற மாதிரி', 'அரிமா நம்பி' உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மணிரத்னம் தயாரிப்பில் ‘வானம் கொட்டட்டும்’படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு 2007ஆம் ஆண்டில், பிரபல தொழிலதிபர் எம்.எஸ். மதிவாணனின் மகள்  லட்சுமி உஜ்ஜைனி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.இத்தம்பதிக்கு விராட் என்ற மகன் உள்ளார். அவரது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. தனது பெயரைக் கொண்ட சிறுவனின் பிறந்தநாள் தொடர்பாக சமூக வலைத்தளம் மூலம் அறிந்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, சிறுவன் விராட்டுக்கு வீடியோ மூலம் டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்து கோலி அனுப்பிய வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் விக்ரம் பிரபு, உங்களின் தீவிர ரசிகனான எனது மகனுக்காக நேரம் செலவிட்டு வாழ்த்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி. உங்கள் வாழ்த்து வீடியோ பார்த்து என் மகன் மிகவும் உற்சாகமாகிவிட்டான். அதே சமயம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான வெற்றிக்கும் வாழ்த்துகள்’ என கூறியுள்ளார்.