ஜனவரி 18ல் துவங்கி சுமார் பத்து நாட்கள் மட்டுமே நடந்த ‘இந்தியன் 2’ படத்தில், கமலுக்குப் போட்ட மேக் அப் கமலுக்கே பிடிக்கலை. அதனால ஷங்கருக்கும் பிடிக்கலை என்பதில் துவங்கி  ஏகப்பட்ட குழப்பங்கள் நடந்திருப்பதால் அதைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் பெரும் சோகத்தில் மூழ்கி இருப்பதாக செய்திகள் நடமாடுகின்றன.

 22 ஆண்டுகள் கழித்து ஷங்கர்-கமல்  கூட்டணியில் ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது. இந்த படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.படத்தின் துவக்கமாக சேனாதிபதி பாத்திரத்தில் கமல் நடித்த ஓல்ட் கெட் அப் காட்சிகள் முதலில் ஷூட் பண்ணப்பட்டன. இந்த கெட் அப்புக்காக போடப்பட்ட மேக் அப்புக்கு கமல் போதிய அவகாசம் அளிக்காமல் நடுநடுவே அரசியல் வேலைகளும் பார்த்ததால் ஷங்கர் சற்று அப்செட் ஆனதாகத் தெரிகிறது.அதனால் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் தீவிரமாக நடந்த நிலையில், கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. எடுத்தவரை உள்ள காட்சிகளைப் பார்த்த ‌ஷங்கரும், கமலும் மேக்கப் இயல்பாகவும், பொருத்தமாகவும் இல்லை என்று கருதி இருக்கிறார்கள். எனவே படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் ‌ஷங்கர் அங்குள்ள மேக்கப் கலைஞர்களுடன் ஆலோசனை நடத்தி மேக்கப் டெஸ்ட் எடுக்க உள்ளார். மேக்கப் பொருந்திய பின்னர் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை எடுத்த காட்சிகள் படத்தில் பயன்படுத்தப்படுமா என்ற தயாரிப்பாளர் தரப்பு கேள்விக்கு ஷங்கர் பதில் சொல்லாமல் நழுவுவதாகவும், இப்படியே போனால் ‘எங்கே செல்லும் இந்த ‘இந்தியன் 2’வின் பாதை?’ என்று தயாரிப்பாளர் குழப்பமாகத் தவித்துக்கொண்டிருப்பதாகவும் தகவல்.