பிரபல இசையமைப்பாளர் டி.இமான், இந்த வருடத்தில் மட்டும் பல வெற்றிப் படங்களுக்கு அடுத்தடுத்து இசையமைத்து, ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தல அஜித், நடித்த 'விசுவாசம்' படத்தில் இவர் இசையில் வெளியான 'கண்ணான கண்ணே' மற்றும் அந்த படத்தில் வந்த,  அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதேபோல் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  

இதைத்தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 168 வது படம், மற்றும் ஜீவா நடித்து வரும் 'சீறு' உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.

இது ஒரு புறமிருக்க, தற்போது  இவர் இசையில் உருவான,   கண்ணான கண்ணே பாடலை பார்வை திறனற்ற இளைஞர் ஒருவர், பாடியது டிக் டாக்கில் வைரலாக பரவியது.  இந்த இளைஞருக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பல நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

மேலும் இமானும், கண்டிப்பாக அந்த இளைஞருக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறி இருந்தார்.  இதையடுத்து தற்போது இமான் சொன்னது போலவே பார்வை திறனற்ற, திருமூர்த்திக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.