சென்னை அரும்பாக்கத்தில் நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் இமான் அண்ணாச்சி. தொலைக்காட்சியில் பிரபலமாகி அதன்மூலம் சினிமாவுக்கு வந்த இவர், தனது வழக்கமான நெல்லை பாஷையில் காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். தற்போது இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டிஸ் சுட்டிஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்களித்து வருகிறார். 

இந்நிலையில், சென்னை அரும்பாக்கம் ராஜீவ்காந்தி நகரில் உள்ள இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகையை மர்மநபர் திருடிச்சென்றுள்ளனர். வீட்டில் ஆட்கள் இருந்த நிலையில் பீரோவில் இருந்த நகைகளை காணவில்லை என இமான் அண்ணாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.