’அதென்னவோ எங்க ராஜா தனது பாடலின் ராயல்டி பற்றி வாயைத் திறந்தாலே அது ராங்காப் போயிடுது’ என்று ராஜவிசுவாசிகள் மீண்டும் களத்தில் இறங்கி, அப்படியே போகிற போக்கில் வழக்கம்போல் ரகுமான் ரசிகர்களையும் வம்பிக்கிழுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

கச்சேரிகளில் தனது பாடலைப் பாடுபவர்கள் அதற்கான ராயல்டியை, அதுவும் ஒரு மிகச்சிறிய தொகையை வழங்குவதற்கு ஏன் இவ்வளவு தயங்க வேண்டும். நீங்களும் காசு வாங்கிக்கொண்டுதானே கச்சேரி செய்கிறீர்கள்? என்று இளையராஜா கேள்வி எழுப்பியுள்ளது கடந்த இரு தினங்களாய் வலைதளங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது.

இதில் ராஜாவின் தரப்பு நியாயத்தை பதிவிடும் சில ரசிகர்கள் ‘ராஜா மட்டும் ஏ.ஆர்.ரகுமான் போல் தனது பாடல்களின்  அனைத்து சங்கதிகளுக்குமான ராயல்டியை வாங்குவது போல் ரகுமான் போல் கறாராக இருந்திருந்தால், அவர் இந்நேரம் பில்கேட்சை விட பெரிய பணக்காரர் ஆகியிருப்பார்’ என்று ரகுமானின் கறார்த்தனத்தை நக்கலடிக்கிறார்கள்.

இதனால் கொதிப்புக்குள்ளாகும் ரகுமான் ரசிகர்கள்,’ யோவ் ராஜாவுக்கு மட்டும் சப்போர்ட் பண்ணு. இப்ப எதுக்கு இந்த மேட்டர்ல எங்க ரகுமானை வம்புக்கு இழுக்கிற? என்று கொந்தளித்து வருகிறார்கள். ராஜா, ரகுமான் பாடல்களைப் போலவே இந்த பஞ்சாயத்தும் சுவாரசியமாகவே போய்க்கொண்டிருக்கிறது.