கொரோனா அறிகுறியுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் சென்டரில் அனுமதிக்கப்பட்டார் எஸ்.பி.பி. அங்கு 51 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பியின் உடல் நிலை தொடக்கத்தில் மோசமடைந்தாலும், கடந்த சில நாட்களாக நல்ல நிலையில் முன்னேறி வந்தது. கடந்த 4ம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என வந்தது. இதனால் எஸ்.பி.பி. மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடுவார் என அனைவரும் காத்திருந்தனர். 

இதே காத்திருப்பு இவரின், 50 வருட கால நண்பரும் முன்னணி இசையமைப்பாளருமான இளைய ராஜா அவர்களுக்கும் இருந்தது. ஆனால் ரசிகர்கள், பிரபலங்கள், நண்பர்கள், என அனைவருடைய கனவையும் கானல் நீராக மாற்றி விட்டு, பாடும் நிலா இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகம் பறந்து விட்டது.

இது உண்மை என்றாலும் கூட பலரால் மனதளவில் இதனை கொஞ்சம் கூட ஏற்று கொள்ள முடியவில்லை. ஏற்கனவே எஸ்.பி.பி கடந்த ஆகஸ்ட் மாதம் மிகவும் கவலை கிடமாக இருந்த போது, இளையராஜா பாலு சீக்கிரம் எழுந்து வா.. உனக்காக காத்திருக்கிறேன். சினிமாவில் தொடங்கி சினிமாவில் மட்டுமே முடிவதல்ல நமது வாழ்க்கை.

சினிமாவுக்கு முன்பே மேடைக்கச்சேரிகளில் ஒன்றாக இசை பயணத்தை தொடங்கினோம். நமக்குள் எத்தனை சண்டைகள் நடந்தாலும், அவையெல்லாம் நமது நட்பை ஒருபோதும் பாதித்ததில்லை. நீ மீண்டு வருவாய் என எனது உள்ளுணர்வு சொல்கிறது. அதுவே உண்மையாகட்டும். பாலு.. சீக்கிரம் வா என்று இளையராஜா உருக்கமாக வீடியோ வெளியிட்டிருந்தார்.

ஆனால் தன்னுடைய எதிர்பார்ப்பு பொய்யானதால்... தன்னுடைய நண்பனை இழந்த துக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ பார்பவர்களையே கலங்க செய்துள்ளது. இதில் இளையராஜா குழந்தை போல்... பாலு... சீக்கிரம் எழுந்து வா... உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என கூறினேன். ஆனா நீ கேட்கல, போய்ட்டா. எங்க போன? கந்தர்வர்களுக்காக பாட போய்டியா? இங்க உலகம் ஒரு சூனியமா போச்சி. உலகத்துல ஒன்னும் எனக்கு தெரியல. பேசுவதற்கும்  பேச்சு வரல, சொல்றதுக்கு வார்த்தையில்லை. என்ன சொல்றதுன்னே தெரியல. என மறு வார்த்தை பேச முடியாமல் குரல் விம்மி நின்ற இளையராஜா பின்னர், எல்லா துக்கத்துக்கு அளவிற்கு ஆனால் இதற்கு அளவு இல்லை என தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ இதோ...