i dont got award in actors hand
நடிகர்களிலேயே தனித்தன்மையோடு ஒரு கேரக்டரை உள்வாங்கி நடிக்க கூடிய திறமை பெற்றவர் சத்யராஜ். தொடக்கத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய இவர், பின் 1986 ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "கடலோர கவிதைகள்" என்கிற படம் மூலம் ஹீரோவாக உருவானார். 120க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், "வில்லாதி வில்லன்" என்கிற படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.அவரது மகன் சுபிராஜ் நடித்த "லீ" என்ற படத்தை தயாரிக்கவும் செய்தார் .
பெரியாரின் வாழ்க்கை வரலாறு, படமான போது காசு வாங்காமல் நடித்து கொடுத்தார். இவரது சமூக அக்கறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக, 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி, சென்னையிலிருந்து, வேலூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் சத்யராஜ் பங்கேற்றார்.
இந்நிலையில், சமீபத்தில் விகடன் விருது 2017 வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பாகுபலி மற்றும் பாகுபலி 2 படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது சத்யராஜிற்கு வழங்கப்பட்டது.
இந்த விருதினை சத்யராஜ் ஒரு பெரிய நடிகரிடம் இருந்து பெறுவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் தனக்கு எந்த ஒரு நடிகரிடமிருந்தும், விருதை பெற விருப்பமில்லை என்றும், சமூக அக்கறை கொண்ட போராளிகள் யாரையாவது தேர்வு செய்து விருதினை கொடுங்கள் என்று மறுத்து விட்டார்.
இதனையடுத்து, சத்யராஜின் விருப்பத்திற்கு ஏற்ப, சமீபத்தில் ஆணவ கொலையில் தனது கணவனை இழந்து, கணவனின் கொலைக்கு காரணமான தனது பெற்றோருக்கு தண்டனை வாங்கி கொடுத்த சமூக நீதி போராளி கவுசல்யாசங்கர் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி ஆகியோர்கள் இந்த விருதை சத்யராஜுக்கு கொடுத்தனர். சமூக அக்கறை கொண்ட சத்யராஜின் இந்த செயலுக்கு, அவருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
