கல்யாணம் ஆகிட்டாலே நோ ஃபியூச்சர். பொண்டாட்டின்னாலே ஒன்லி டார்ச்சர் என்ற நியதிக்குட்பட்ட உலகில் ஒருவர் ‘ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்’ என்று 13 வருடங்களாக கோயில் கட்டி சிலை வடித்து கும்பிட்டு வருகிறார் என்றால் நம்பவா முடிகிறது? அது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். வேறு வழியில்லை நம்பித்தான் ஆகவேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் உசிலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி செண்பகவல்லி. தனது மாமன் மகளான செண்பகவல்லியை சுப்பையா கடந்த 1958ம் ஆண்டு காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். 

இந்த தம்பதியினருக்கு 8 பிள்ளைகள். அவர்கள் அனைவரையும்  நன்றாக படிக்க வைத்து திருமணம் செய்து வைத்து வைத்தனர். அவர்கள் தற்போது தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில், 2006ம் ஆண்டு செண்பகவல்லி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மனைவியின் இறப்புக்கு பின்னர், சுப்பையாவை தனிமை வாட்டியது. மனைவியின் இறப்பை தாங்க முடியாத நிலையில், அவருக்கு சிலை வைக்க விரும்பினார்.

இதைத்தொடர்ந்து, 3 லட்சம் ரூபாய் செலவில் தனது மனைவிக்கு 3.5 அடியில் ஐம்பொனில் சிலை செய்து வீட்டில் நிறுவியுள்ளார். அதுமட்டுமின்றி, கடந்த 13 ஆண்டுகளாக நாள்தோறும் அந்த சிலையை வழிபட்டும் வருகிறார்.

இது குறித்து பேசிய சுப்பையா, ”எனது மனைவியை மிகவும் நேசித்தேன். 48 ஆண்டுகால திருமண வாழ்க்கை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனது மனைவியின் இறப்புக்கு பின்னர் என வாழ்க்கையே முடங்கி விட்டது. அவரது இறப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை” 

  நான் கட்டிய தாலியை அவள் இறந்த பிறகு அவிழ்த்து கொடுத்தார்கள். அந்த தாலியை மீண்டும் செண்பகம் (சிலை) கழுத்தில் கட்டினேன். ஒவ்வொரு நாளும் தீபம் காட்டி வழிபடுகிறேன். சிலையாக செண்பகம் நிற்பதால் நான் தனிமைபட்டவன் இல்லை என் காதலி என்னுடள் இருக்கிறாள் என்பதை உணர்கிறேன். அதனால் எனக்கு நிம்மதி கிடைக்கிறது. அந்த நிம்மதி என் இறுதி காலம் வரை இருந்தால் போதும். நான் இறக்கும் வரை செண்பகத்திற்கு தீபம் காட்டுவேன். செண்பகத்தின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் புத்தாடை அணிவிப்பேன். இறந்த நாளில் நானும் எங்கள் குழந்தைகளும் இணைந்து அன்னதானம் கொடுப்போம். அந்த நிம்மதியோடு வசிக்கிறேன். 

 என் காதலி செண்பகம் என்னோடு வாழ்கிறாள்.. எங்கள் காதல் வாழ்கிறது. இறப்பு உடலுக்கு தான் காதலுக்கு இல்லை’ என்கிறார் 83 வயது காதலன்.