செய்யாத தவறுக்கு அபராதம் விதித்து, சினிமா இயக்குநரை தரக்குறைவாக பேசிய விவகாரம் தொடர்பாக காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் மீது  போலீஸ் கமிஷனர் விசாரித்து 2 வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய்யை வைத்து ’திருமலை’, ’ஆதி’ உள்ளிட்ட படங்களையும் தனுஷை வைத்து ‘சுள்ளான்’படத்தையும்  இயங்கியவர் ரமணா சந்திரசேகர். இவர், சென்னை சாந்தோம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த வாரம் மனைவி, மகளுடன் காரில் சென்றபோது, போக்குவரத்து  காவலர்கள் விதிமீறி செல்லாத போதும், அவரது காரை நிறுத்தி அபாரதம் விதித்தனர். மேலும் அவரின் நோய் தன்மை குறித்து மனம் வருந்தும்படி ஏளனமாக பேசி உள்ளனர். மேலும் அபராத தொகையை வசூலித்த பிறகே அவரது கார்  சாவியை வழங்கினர். 

சம்பவ இடத்தில் நடந்த விவரங்களை ரமணா சந்திரசேகர், தன் முகநூல் பதிவில் வேதனையுடன் வெளிப்படுத்தி இருந்தார். அது முகநூலில் வைரலாகப் பரவவே கடுமையாக நடந்துகொண்ட காவலர்கள் பொதுமக்களால் விமர்சிக்கப்பட்டனர்.அன்று போக்குவரத்துக் காவல்துறையின் மானம் வலைதளங்களில் கப்பலேறியது.

இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டு போக்குவரத்து காவல் இணை ஆணையர் எழிலரசன், இதுதொடர்பாக விசாரணை  செய்ய உத்தரவிட்டார். மேலும் போக்குவரத்து காவல்துறை சார்பில் அவரின் வீட்டிற்கு சென்று வருத்தம் தெரிவித்தனர். அச்சம்பவம் தொடர்பாக காவலர், உதவி ஆய்வாளர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தச் செய்தி பத்திரிகையில் வெளிவந்ததை அடுத்து அதை படித்து பார்த்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சென்னை  போலீஸ் கமிஷனர் 2 வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். கொஞ்சமும் மனிதத்தன்மையற்ற முறையில் நடந்துகொண்ட காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் இருந்துவந்த நிலையில் மனித உரிமை ஆணைய நீதிபதியின் இந்த நடவடிக்கை பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.