சூர்யாவின் தி.நகர் வீடு, ரூ.100 கோடிக்கும் மேல் கட்டப்பட்ட 7 நட்சத்திர ஹோட்டலை போன்று பிரம்மாண்டமாக உள்ளது. இதற்கான நிதியை நடிகர் சூர்யா எவ்வாறு திரட்டினார் என கூற முடியுமா? என பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர். நிர்மல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்வி கொள்கைக்கு ஏன் அவசரம் என்று கேட்டுள்ளார் சூர்யா. 2015 ஆண்டு முதல் டாக்டர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கமிட்டி அனைத்து மாநில பிரதிநிதி மற்றும் வல்லுனர்களுடன் பல கட்ட ஆலோசனைக்கு பிறகுதான் இதை பரிந்துரை செய்துள்ளனர். 

அதனுடன் டாக்டர் அப்துல் கலாம் உதவியாளர் பொன்ராஜ் அவர்களின் அனைத்து பரிந்துரையும் எந்தவித திருத்தமும் இல்லாமல் அப்படியே ஏற்று கொண்டது இந்த கமிட்டி. இதில் எந்த வித அவசரமும் காட்டவில்லை. அடுத்ததாக 3 வயது குழந்தையால் மூன்று மொழி கற்க முடியுமா என கேட்டுள்ளார். இன்று சூர்யா போன்ற  வசதி படைத்தவர்கள் குழந்தைகள் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ சிலபஸில் தனியார் பள்ளிகளில் மூன்று மொழியை கற்கும் பொழுது, கிராமத்து குழந்தைகளால் கண்டிப்பாக கற்க முடியும். 

1848 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதே என குறிப்பிட்டுள்ளார் சூர்யா. நாம் நமது கல்வி கொள்கையில் எந்த வித மாறுதலும் செய்யாமல் இருந்தால் அனைவரும் தனியார் பள்ளிகளை தேடி செல்லும் நிலைதான் உருவாகும். இதே நிலை நீடித்தால் 1848 பள்ளிகள் மட்டுமல்ல, சில வருடங்களில் அனைத்து அரசு  பள்ளிகளும் மூடப்படலாம்.

நீட் தேர்வு அவசியமா என கேட்டுள்ளார். கண்டிப்பாக அவசியம்தான். ஒரு கோடி ரூபாய் வைத்திருந்தால் யார் வேண்டுமானாலும் மருத்துவராகலாம் என்ற நிலையை மாற்றி, கல்வி தகுதி உடையவர்கள் மட்டுமே இன்று நீட் தேர்வால் மருத்துவராக முடியும். தனியார் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற ஒரு தகுதி தேர்வு மிக அவசியம். மேலும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் வெளிப்படை தன்மை மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே மருத்துவராகும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி கொள்கை தொடர்பாக, எந்தவித அடிப்படை அறிவும் இல்லாமல், யாரோ எழுதி கொடுத்ததை மேடையில் நடித்துவிட்டு சென்றுள்ளார். இனிவரும் காலங்களில் ஆண்டிற்கு 5 லட்சத்திற்கும் அதிகமாக கல்லூரியில் இருந்து வெளிவரும் மாணவர்களுக்கு, சிறந்த கல்வி கொள்கையால்தான் வேலை வாய்ப்பு அமையும். நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் தொடர்பாக ஏராளமான தகவல்கள் வெளிவந்துள்ளன. இவை தொடர்பாக நமது கேள்விகளுக்கு விளக்கம் தருவாரா அவர்?

1) நடிகர் சூர்யா, தான் நிர்வகிக்கும் அகரம் அறக்கட்டளைக்கு அவருடைய குடும்பம் சார்பில் எவ்வளவு நிதி இதுவரை  வழங்கபட்டுள்ளது என வெளியிட முடியுமா?

2) அகரம் அறக்கட்டளைகாக பல வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு பின்னர் மூடியுள்ளனர். இது எதனால் என தெரிவிக்க முடியுமா சூர்யா?

3) நடிகர் சூர்யா, வரி ஏய்ப்பிற்காக தனது சம்பளத்தை அகரம் அறக்கட்டளை வங்கி கணக்கிற்கு, துபாயை சேர்ந்த ஸ்டார் ஷிப்பிங் நிறுவனம் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சினி கேலக்சி போன்ற நிறுவனங்களில் இருந்து வாங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கு நடிகர் சூர்யா எப்போது பதில் சொல்லப் போகிறார்?

4) நடிகர் சூர்யாவின் தி.நகர் வீடு, ரூ.100 கோடிக்கும் மேல் கட்டப்பட்ட 7 நட்சத்திர ஹோட்டலை போன்று பிரம்மாண்டமாக உள்ளது. இதற்கான நிதியை நடிகர் சூர்யா எவ்வாறு திரட்டினார் என கூற முடியுமா?

5) பேங்க் ஆப் இந்தியா மற்றும் அகரம் அறக்கட்டளைக்கு உள்ள உறவை நடிகர் சூர்யா தெளிவு படுத்துவரா?

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்ட வரைவு தொடர்பான நடிகர் சூர்யாவின் கேள்விகளுக்கு நாம் விளக்கம் தந்துவிட்டோம். அதேபோல, அகரம் அறக்கட்டளை தொடர்பான நமது கேள்விக்கு சூர்யா விளக்கம் தர வேண்டும் என கேட்டு கொள்கிறோம்’’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.