வடிவேலுவின் (vadivelu) உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு (vadivelu). இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் வடிவேலுவுக்கு மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, அவர் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார் வடிவேலு. சில ஆண்டுகள் படங்களில் நடிக்காவிட்டாலும் மீம்ஸ் மூலம் தினந்தோறும் மக்களை மகிழ்வித்து வந்தார் வடிவேலு (Vadivelu). சமீபத்தில் வடிவேலு மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டு, அவர் மீண்டும் படங்களில் நடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து சுராஜ் (Suraj) இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் (naai sekar returns) படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் வடிவேலு. இப்படத்தின் பணிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் பூஜையோடு துவங்கியது. பின்னர் சாங் கம்போசிங் பணிக்காக, படக்குழுவினருடன் வடிவேலு லண்டன் சென்றிருந்தார். 

அந்த பணிகளை முடித்துக்கொண்டு கடந்த வாரம் சென்னை திரும்பிய வடிவேலு மற்றும் இயக்குனர் சுராஜுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், வடிவேலுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது; நன்றாக குணமடைந்து வருகிறார், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.