நெல்லை பெருமாள்புரம் பகுதியை சேர்ந்த உமாமகேஸ்வரன் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் சில சமூகவலைத்தளங்கள் நேரலை செய்யக்கூடிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. சில அங்கீகரிக்கப்பட்ட செய்தி சேனல்களை தவிர மற்றவர்கள் உண்மைக்குப் புறம்பான விஷயங்களை நேரலை என்று கொடுத்து வருகின்றனர் என தெரிவித்தார். 

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "யூடியூப், பேஸ்புக், கூகுள் மற்றும் சமூக வலைதளங்கள் தங்களுக்கான தணிக்கையை தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  புகார்கள் ஏதேனும் வரும் பட்சத்திலேயே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்" என தெரிவித்தனர். 

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் யூடியூப், பேஸ்புக், கூகுள் ஆகிய நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டும், மத்திய அரசு இது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்தும் தெளிவுப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.