"தர்பார்" திரைப்படம் ரிலீஸ் ஆக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு சூப்பர் ஸ்டார் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள "தர்பார்" திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் "தர்பார்" படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2.O பட விநியோகத்தின் போது பெற்ற பணத்தை திரும்ப தராமல் மோசடி செய்ததாக மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய் கிரியோஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதில் லைகா நிறுவனம் இதற்கு முன்பு ரஜினியை வைத்து தயாரித்த 2.O படத்திற்காக லைகா தங்களது நிறுவனத்திடம் இருந்து ரூ.12 கோடி ரூபாய் கடன் பெற்றதாகவும், அதை திருப்பி செலுத்தாததால் தற்போது 23 கோடி ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நிலுவைத் தொகையை தராமல் லைகா நிறுவனம் தர்பார் படத்தை வெளியிடக் கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக லைகா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், தங்களுக்கு எவ்வித கடனும் இல்லை என்றும், மனுதாரர் தரப்பில் இருந்து தான் 1 கோடியே 45 லட்சம் ரூபாய் தர வேண்டியுள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் தர்பார் படத்திற்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

ஆனால் மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்களுக்கு தரவேண்டிய தொகைக்கு பதிலாக காலா படத்தின் சிங்கப்பூர் உரிமையை அளித்துள்ளதாக பதில் மனுவில் தெரிவித்துள்ளனர். ஆனால் அது போன்ற எந்த ஒப்பந்தம் செய்யவில்லை என தெரிவித்தார். இதையும் மறுத்த லைகா நிறுவனம், அதற்கான ஒப்பந்தம் தங்களிடம் உள்ளதாக தெரிவித்தது. 

இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்துள்ள உயர் நீதிமன்றம், லைகா நிறுவனம் 4 கோடியே 90 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி உத்தரவாதம் அல்லது வங்கியில் டெபாசிட் செய்யும் வரை தர்பார் படத்தை மலேசியாவில் திரையிட இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் நீதிமன்றம் கூறிய தொகையை டெபாசிட் செய்துவிட்டால் தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிடலாம் என்றும் நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.