ஒரே டைட்டில்,  இரு படங்களுக்கு வைப்பதும், பின் அது சர்ச்சையாவதும், திரையுலகில் பல வருடங்களாக அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கும் படத்திற்கு 'ஹீரோ' என்ற டைட்டில் வைக்கப்பட்டு, நேற்று படப்பிடிப்பை துவங்கினர் படக்குழுவினர்.

இதே தலைப்பில், தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவீ மேக்கர்ஸ், விஜய் தேவரகொண்டாவை வைத்து  தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் எடுக்க உள்ள படத்திற்கும் 'ஹீரோ' என்ற பெயரை அறிவித்தனர். 

இரண்டு படங்களுக்கு ஒரே பெயர் வைத்தது, புது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின் இந்த பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று இரு படக்குழுவினருக்கு இடையே சர்ச்சையை ஏற்படுத்தும் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலில், சிவகார்த்திகேயன் பட நிறுவனம், இந்த 'ஹீரோ' தலைப்பை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்து அனுமதி கடிதம் பெற்று வாங்கியுள்ளனர். அதனால், அவர்களுக்குத்தான் இந்தப் பெயரில் முழு உரிமை உள்ளது. மேலும், இந்த தலைப்பை தயாரிப்பாளரும், இயக்குனரும், இசையமைப்பாளருமான எஸ்.எஸ்.குமரன் 2017ம் ஆண்டிலேயே பதிவு செய்து வைத்திருந்ததாகவும். அவர்களிடம் இருந்து சிவகார்த்திகேயன் பட நிறுவனம் அணுகி, அந்தத் தலைப்பை வாங்கியுள்ளார்கள். 

ஆனால், விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ஹீரோ' படத்திற்கான தலைப்புக்காக அவர்கள் விண்ணப்பம் மட்டும்தான் கொடுத்துள்ளார்களாம். ஆனால், அவர்களுக்கு அந்தத் தலைப்பை தயாரிப்பாளர் சங்கம் அனுமதி கடிதம் மூலம் வழங்கவேயில்லை. விண்ணப்பம் செய்துவிட்டதால் மட்டும் ஒரு தலைப்பை உரிமை கோர முடியாது. அனுமதி கடிதம் கொடுத்த பிறகு மட்டும்தான் உரிமை கோர முடியும் எனச் கூறப்படுகிறது. இதில் இருந்து இந்த படத்தின் முழு உரிமையும் சிவகார்த்திகேயன் படத்தையே சேரும் என அறிவித்துள்ளனர்.