பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தனது சக பயணி ஒருவன் தனது அந்தரங்கத்தில் கை வைத்ததாக நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.  மீ டூ என்கிற ஹேஸ் டேக்கில் நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை ட்விட்டரில் துணிச்சலாக வெளியிட்டு வருகின்றனர். பிரபல நடிகைகள் பலரும் பிரபல நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், மூத்த நடிகர்கள் என பலர் மீது பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்பது தான் பலரது கேள்வியாக இருக்கிறது. 

தமிழகத்தில் பாடகி சின்மயி வைரமுத்துவுக்கு எதிராக புகார் கூறிய போதும் ஆதாரம் கேட்கப்பட்டது. இதே போல் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூனுக்கு எதிராக புகார் கூறிய போதும் ஆதாரம் கோரப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டதாக கூறிக் கொள்ளும் பெண்கள் செய்தியாளர்களை சந்தித்த போதும் குறைந்தபட்ச ஆதாரம் கூட இல்லாமல் எப்படி புகார் அளிக்கிறீர்கள் என்கிற கேள்வியே முன்வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு மனைவியாக நடித்து புகழ் பெற்ற நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். ஒரு முறை தான் பெங்களூரில் இருந்து கொச்சிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்ததாக அவர் கூறியுள்ளார். திடீரென தனக்கு முழிப்பு ஏற்பட்டதாக ஷ்ராதா கூறியுள்ளார். அப்போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த சக பயணி தனது கைகளை எனது அந்தரங்கத்தில் வைத்திருந்ததாக ஷ்ரதா தெரிவித்துள்ளார்.

அந்த பயணி எனது அந்தரங்கத்தில் கைகளை வைத்திருந்ததற்கு தன்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை என்று ஷ்ரதா கூறியுள்ளார். ஆனால் அந்த மோசமான அனுபவம் தனது மனதில் இருந்து நீங்காத நியாபகமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த விவகாரத்திற்கு ஆதாரம் கேட்பவர்களிடம் நான் கேட்கிறேன், அன்று அந்த நபர் எனது பிறப்புறுப்பில் கை வைத்ததை போட்டோ எடுத்திருக்க வேண்டும் என்கிறீர்களா? என்று வினவியுள்ளார்.